உள் ஒதுக்கீடு : சரியான சமூக நீதி


இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி. சமநீதிக்கான வழி இது.
பேரறிஞர் அம்பேத்கரின் கடின உழப்பினால் இடஒதுக்கீடு சட்ட அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வந்தது. என்னுடைய பங்கு எனக்கு வர¼ண்டும் என்று சொல்வது உரிமை. அவனுடைய பங்கை அவனுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொல்வது மனித உரிமை மீறல். சமூக அளவில் இது சமூக உரிமை மீறல்.
செப்டம்பர் 5, 2011ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன், " அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிராகத் தமிழ் நாட்டில் மட்டும் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்தாளும் வகையில் இது அமைந்துள்ளது. அருந்ததியர் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான உள்ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் " என்று பேசி இருக்கிறார்.
முன்னாள் நீதியரசர் ஜனார்த்தன் தலைமையிலான ஆணையம் நன்கு ஆய்வு செய்து, சட்ட ரீதியாக அறிவித்த 3 விழுக்காடு உள்ஒதுக்கீட்டில் எந்தக் குழப்பமும் இல்லை, அரசமைப்புச சட்டத்திற்கு மாறாகவும் இது இல்லை என்பது தமிழரச னுக்குத் தெரியாமல் போனதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.
அருந்ததியர், பள்ளர், பறையர் ஆகிய மூன்று சமூகங்களும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள்,. இவை இணைந்து ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று சொன்னால், அது " தலித் ஒற்றுமைக்கு " அடையாளம்.
அதைவிட்டுவிட்டு, அருந்ததியருக்கு இடஒதுக்கீடு கொடுப்பது தாழ்த்தப்பட்டவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்று சொல்வது, தாழ்த்தப்பட்டவர்கள் ஒற்றுமையைச் சீர்குலைப்பதாக அமைகிறது. இதுவும் தமிழரசனுக்குப் புரியவில்லை.
அடுத்து இவ்ஒதுக்கீடு அருந்ததியர் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சொல்கிறார். அப்படி அருந்ததியர் மக்கள் சொன்னார்களா? அல்லது அருந்ததியர் இயக்கங்கள்தான் சொல்கின்றனவா?
தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாக, மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக மிக மிகப் பின்தங்கி இருக்கும் அருந்ததியர் சமூகத்திற்குத் தோள்கொடுக்க வேண்டிய தலித் "எழுச்சி " செ.கு. தமிழரசன், சமூகநீதி அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் காட்டும் முனைப்பும், ஆர்ப்பரிப்பும் அவரின் தலித் ஒற்றுமைப் போர்வையை உருவிவிட்டது. தலித் ஒற்றுமை சாத்தியமாகாமல் போனதற்கு இவர் போன்றவர்கள்தான் காரணம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அரூர் டில்லிபாபு அருந்ததியர் களுக்கான ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசிய போது, " மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் மாநிலத்தில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை " என்றும் பேசியிருக்கிறார்.
அருந்ததியர்கள் தமிழ்நாட்டு மக்கள். மேற்கு வங்க மக்கள் அல்லர். மேற்கு வங்க அரசுப் பதிவிதழில் " அருந்ததியர் " என்ற பெயரே இல்லை என்ற சாதாரண செய்திகூடத் தெரியாமல் பேசுவது சரியாக இருக்காது.
தவிர, மிகவும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு முதன்முதலில் உள்ஒதுக்கீடு வழங்கியது தமிழகம் என்றால், அது தமிழகத்திற்குத்தானே பெருமை. இதுவும் கூடவா இவருக்குப் பொறுக்கவில்லை.
நேபாளத்தில் பிறந்த பவுத்தத்தைப் பற்றிப் பேசவில்லை என்றாலும் குற்றமில்லை ; அனுராதபுரத்துப் பவுத்தத்தைப் பேசாமல் இருப்பதுதான் செ.கு. தமிழரசனுக்குப் பெருமை.
இதற்கு முன்னால் ஆந்திராவில் அருந்ததியருக்கான தனி உள்ஒதுக்கீடு நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டு விட்டதாகக் கூறியிருந்தார். இதில் அவருக்குப் புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது.
06.06.1997ஆம் நாளிட்ட ஆந்திர அரசின் அரசாணை (G.o. M.S.No.68, Social Welfare (JI) Dept., Dated 6.6.1997) யின்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டிருந்த 11 துணைச் சாதிப் பெயர்களை உள்ளடக்கி இருந்த ரெல்லி சமூகத்திற்கு அந்த மக்கள் தொகையின் அடிப்படையில், " A " அடுக்கில் 1 விழுக்காடும் ; அதற்கு அடுத்த நிலையில் 17 துணைச் சாதிகளைக் கொண்ட மாதிகா சமூகத்திற்கு " B " அடுக்கில் 7 விழுக்காடும் ; மூன்றாவதாக " C " அடுக்கில் 24 துணைச்சாதிகளைக் கொண்ட " மாலா " சமூகத்திற்கு 6 விழுக்காடும் ; நான்காவதாக மூன்று துணைச்சாதிகளைக் கொண்ட " ஆதி ஆந்திராவுக்கு " 1 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கியது ஆந்திர அரசு. இது நீதிமன்றத் தடைக்கு உள்ளான போதும், இந்த அடுக்குமுறை இடஒதுக்கீட்டில் ஒரு சமூக நீதி இருந்தது என்பதை மறுக்க முடியாது.
அருந்ததியர் சமூக மக்களுக்கு தி.மு.கழக அரசு 3 விழுக்காடு உள்இட ஒதுக்கீடு வழங்கியது வரலாற்றில் பதிவான ஒன்று. ஆனால் இவ்ஒதுக்கீடு போதாது. 6 விழுக்காடு இந்த மக்களுக்குக் கிடைக்க வேண்டும் அல்லது மேற்சொன்ன அடுக்குமுறையில் " A " அடுக்கில் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுதான் சமூக நீதி.
புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியும் அவருடன் சேர்ந்து அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்.
சட்டமன்றத்தில் அவர் "அருந்ததியருக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத உள்ஒதுக்கீட்டினால் 15 சதவீத தலித் மக்களுக்கு அநீதி வழங்கப்பட்டுள்ளது " என்று பேசியிருக்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. விவரமான மனிதர் கிருஷ்ணசாமி, இப்படி விவரமில்லாமலா பேசுவது?
15 சதவீதம் மக்களா? அல்லது இட ஒதுக்கீடா? ‡ பாவம் குழம்பிப் போயிருக்கிறார்.