ஆந்திராவில் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு அம்பேத்கர் தேசிய விருது! துணை முதல்வர் வழங்கினார்
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஆந்திராவில் இயங்கி வரும் தலித் கலா மண்டலி என்கிற அமைப்பின் சார்பில் 07/09/2011 அன்று ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில் அம்பேத்கர் தேசிய விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் மாண்புமிகு தாமோதர ராஜநரசிம்மா அவர்கள் கலந்துக்கொண்டு அவ்விருதினை வழங்கி சிறப்பித்தார். தலித் கலா மண்டலி என்கிற அமைப்பின் 35-வது ஆண்டு விழாவும், அவ்வமைப்பின் நிறுவனர் மாஸ்டர் ஜீ அவர்களின் 60-வது பிறந்த நாள் விழாவும், விருதுகள் வழங்கும் விழாவும் ஒருங்கிணைந்த முப்பெரும் விழாவாக அது நடைபெற்றது. அவ்விழாவிற்கு எஸ்.பி.ராஜூ தலைமை வகித்தார்.
துணை முதல்வர் தாமோதர ராஜ நரசிம்மா அவர்களும் கவிஞர் ஸ்ரீ நாராயண ரெட்டி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். துணை முதல்வரிடமிருந்து அம்பேத்கர் தேசிய விருதினை பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: அம்பேத்கர் தேசிய விருதினை வழங்கி என்னை சிறப்பித்த தலித் கலா மண்டலி அமைப்பினருக்கும், அவ்விருதினை வழங்கிய துணை முதல்வர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தாய்மொழி ஆகிய தெலுங்கு மொழியை பேச இயலாமைக்கு வருந்துகிறேன். இங்கு பேசியவர்கள் துணை முதல்வராய் இருக்கும் ராஜ நரசிம்மா அவர்களை விரைவில் முதல் அமைச்சர் ஆவார் என்று வாழ்த்தினார்கள். நானும் அவரை அவ்வாறே வாழ்த்துகிறேன்.
பெரியார் பிறக்காத இம்மண்ணில் ஒரு தலித் துணை முதல்வர் அளவுக்கு உயர முடிந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் அந்தளவுக்கு இன்னும் பக்குவமடையவில்லை. தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக வளரவேண்டுமானால் அவர்கள் முதலில் அமைப்பாக அணி திரள வேண்டும். ஆனால் நாம் பல்வேறு காரணங்களினால் சிதறிக் கிடக்கிறோம். இந்தியாவில் சுமார் 30 கோடி தலித்துகள் இருக்கிறோம். நாம் ஒன்று சேர்ந்தால் இந்தியாவின் நிலையான பிரதமராக ஒரு தலித் தான் வரமுடியும். இந்தியாவில் குடியரசு தலைவராக ஒரு தலித் வருவதற்கு அனுமதிப்பார்கள் ஆனால் ஒரு தலித் பிரதமராக வர வேண்டும் என்பது தான் கன்சிராம் அவர்களின் கனவாக இருந்தது. அவருடைய உழைப்பால் தான் மாயாவதி முதல் அமைச்சராக முடிந்திருக்கிறது. அனைத்து பூட்டுகளுக்கும் ஒரே சாவி அரசியல் அதிகாரம் தான் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர்.
நாம் அதிகாரத்தை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறோம். நிலம், வீடு, நாடு, நகை, பணம் இவை மட்டுமே சொத்து எனக் கருதுகிறோம். ஆனால் அதிகாரமும் ஒரு சொத்து தான் என்பதை நாம் நினைத்து பார்ப்பதில்லை. அதிகாரம் சொத்து என்று நினைத்தால் தான் அதிலும் நமக்கு பங்கு வேண்டும் என்று போராடுவோம். எனவே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று போராடுவதோடு அதிகாரத்தையே கைப்பற்ற வேண்டும் என்றும் நாம் போராட வேண்டும். அதற்கு நாம் அரசியல் சக்தியாக வளர வேண்டும் என்று உரையாற்றினார். தோழர் சுனில் இதனை தெலுங்கில் மொழிபெயர்த்தார்.
வந்திருந்தோர் அவர் உரையைக் கேட்டு எழுச்சியோடு கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு ஏராளமான இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சூழ்ந்துக் கொண்டு படம் பிடித்துக் கொண்டனர். ஆந்திராவில் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் கிளையை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து தலைவரின் தனிச் செயலாளர் பாவலன், தண்டலம் தமிழ்ச் செல்வன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். ஆந்திராவைச் சார்ந்த வெங்கட்ரமணா அவர்களும் தலைவரோடு அந்நிகழ்வில் கலந்துக்கொண்டார்.
அடுத்தநாள் காலை துணை முதல்வர் தமது இல்லத்தில் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் உடன் சென்றவர்களுக்கும் சிற்றுண்டி வழங்கினார். சுமார் அரை மணி நேரம் தமிழக, ஆந்திர ஆரசியல் நிலைமைகள் குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.