(மனித உயிர்கள் மீதான அக்கறை குறித்து தமிழகத்தில் நிலவும் போராட்டங்களை நாம் தொடர்ந்து பார்த்துவருகின்றோம். ஊடகங்கள், கட்சிகள், தமிழ் இனப்பற்றாளர்கள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் என பலதிசைகளிலிருந்தும் மனித உயிர்களுக்கான கருசனைஎனக்கூறி போராடி வருகின்றார்கள்.(!!!)ஒரு மனிதனால் மேற்கொள்ளப்படும் எவ்வகையான குற்றச்செயலுக்கும் மரணதண்டனை என்பது ஒரு நீதி அல்ல. அதுவும் அநீதியே என்பதை நாம் இன்று நேற்று அல்ல மிக நீண்டகாலமாகவே கூறிவருகின்றோம். துரோகிகள் என சுட்டபோதும்,கள்வன் எனச்சுட்டபோதும்,விலைமாது எனச்சுட்டபோதும்,இராணுவத்துடன் கதைப்பவன் எனச்சுட்டபோதும், சமூகவிரோதிகள் எனச்சுட்டபோதும் நாம் அனைத்தையும் கண்டித்தே வந்திருக்கின்றோம். இவ்வாறான மேற்படி பல மரணதண்டனைகளை தமிழநாட்டு தமிழ்த்தேசிய சிந்தனை ஆதரித்தே வந்தது. இந்த தமிழ்த்தேசிய பெரும்பான்மைதான் இன்று மரணதண்டனைக்கு எதிராக குரல்கொடுத்தும் வருகின்றது. இந்த தமிழ்நாட்டு தமிழ்த்தேசிய சிந்தனையானது பரமக்குடியில் நிகழ்ந்த சாதியக் கொலைக்கு எதிராக , அங்கு மேற்கொள்ளப்பட்ட மரதண்டனைக்கு எதிராக எதையும் அசைக்க மறுக்கின்றதே ஏன்? மனித உரிமை என்றால் என்ன? தலித்துக்களின் உசிர் என்ன மசிரா? என நாம் இவர்களை நோக்கி கேட்பதோடு பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட சாதியப்படுகொலைகளை இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.)
—————————————————————————————— ————————————————-
டி.அருள் எழிலனால் எழுதப்பட்ட விபரம்:
கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம்.
எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பள்ளர் சமூகத்தலைவர்களுள் முக்கியமானவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர்தான். இதில் கிருஷ்சாமியைத் தவிற எனைய இரண்டு தலைவர்களும் அரசியல் ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற பல் வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேவர் சமூகம் வழிபடும் முத்துராமலிங்கம் என்பவர் எப்படி அந்த சமூகத்தை தவறான பாதையில் வழி நடத்தி, அனைத்து தேவர் மக்களையும் தலித் மக்களுக்கு எதிராக திருப்பினாரோ அது போன்று பள்ளர் இன மக்களை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு உணர்ச்சி மயபட்ட வன்முறை விளிம்பில் நிறுத்துபவர்தான் இந்த ஜாண்பாண்டியன். நீண்டகாலமாக சிறையில் இருந்த ஜாண்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிறையிலிருந்து வெளியில் வருகிறார். தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நடத்தும் ஜாண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியில் வந்த வுடன் அவரது ஆதரவாளர்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார் ஆகவே இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை புத்தெழுச்சியோடு கொண்டாட முடிவு செய்து.பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே பிளெக்ஸ் போர்டுகள் விளம்பரப்பலகைகளை அமைக்கின்றனர்.
இது ஆதிக்க சாதியான தேவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்குவதோடு, ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செய்யும் மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திலும் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் கடந்தப் ஒரு வராமாக போலீசார் தலித் சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவுக்குச் யாரும் செல்லக் கூடாது அப்படிச் செல்கிறவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெயர் பதிய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே கடுப்பான தலித் மக்களோ இதனால் ஆவேசம் அடைந்திருக்கின்றனர்.
இந்நிலையில்தான் தலித் மாணவனான பழனிக்குமார் படிக்கும் பள்ளியிலும் இது தொடர்பான முரண்பாடுகள் எழ பழனிக்குமார் தேவர் சாதி மாணவர்களுக்கு எதிராகவும் இமானுவேல் சேக்ரனுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். பழனிக்குமார் இதை தனது காலனியிலோ அல்லது வீட்டிலோ சொல்லாத நிலையில் தேவர் சாதி மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தேவரை இழிவு செய்த பழனிக்குமார் பற்றி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்த பழனிக்குமாரை தேவர் சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பழனிக்குமார் கொலையும், போலீசின் அடக்குமுறையும் சேர தலித் மக்கள் மிகவும் கோபமாக காணப்பட்டுள்ள நிலையில்,
நேற்று காலையிலிருந்தே பரமக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் இமானுவேல் சேகரன் சுடுகாட்டில் தலித் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் அவர்களை பல் வேறு இடங்களில் போலீசார் விழாவுக்க்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி திரண்ட தலித்துக்களில் ஜாண்பாண்டியனின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஜாண்பாண்டியனின் வருகைக்காக காத்திருந்த போது அவரை தூத்துக்குடியில் தடுத்த போலீசார் வல்லநாடு போலீஸ் டிரெயினிங் அக்காடமிக்கு கொண்டு சென்றுள்ளனர். ( இங்கே வல்லநாடு பயிற்சிப்பள்ளியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் போலீஸ் நிகழ்த்தும் பல சட்ட விரோத என்கவுண்டர்களை இந்த காட்டுப்பகுதிக்குள் வைத்துத்தான் செய்யும்) இந்தப் பகுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்ற செய்தி எட்டியதும். அவரை போலீஸ் சுட்டுக் கொல்லப் போகிறது என்றும், கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதும். இமானுவேல் சுடுகாட்டில் திரண்டிருந்த மக்கள் பரமக்குடி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிரட்டிப் பார்த்த போலீசுக்கு அஞ்சாமல் கோஷமிட்ட படியே இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த சிதறி ஓடிய தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசியிருக்கிறார்கள்.
சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக பலரும் குண்டடி பட்டு விழுந்திருக்கிறார்கள். ஜாண்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவ இது மதுரையிலும் மறியலாக மாற அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.ஆக மொத்தம் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். போலீஸ் இதுவரை எந்த செய்திகளையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி படுகொலையின் பின்னர் மிகப்பெரிய இனப்படுகொலையாக கணிக்கப்படும் பரமக்குடி, மதுரை தலித் இனப்படுகொலையை தமிழக அரசும், ஊடகங்களும் மறைத்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. போலீசைத் தாக்கிய செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லும் தமிழ் தொலைக்காட்சிகள் கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு வரியைக் கூட மறந்தும் சொல்ல மறுக்கின்றன. நமது ஊடகங்கள், நமது போலீஸ், நமது அரசு என எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்று விட்டதை இது காட்டுகிறது. திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செய்த அயோக்கியத்தனமான சாதி அரசியலின் விளைவாய் இன்று தலித்துக்கள் நிர்கதியாய் விடப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் செல்வாக்குச் செலுத்தும் தமிழ் அரசியலோ தலித் படுகொலைகள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் தமிழகம் முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒரு விதமான அச்சத்துள் உரைந்து போயுள்ளனர். சாதி இந்து அமைப்பு, அரசு நிர்வாகம். போலீஸ் என அதிகாரவர்க்கங்களின் சாதிக் கொடூரங்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
* பரமக்குடியில் நடத்தப்பட்டுள்ள போலீஸ் துப்பாக்கிச் சூடு அவசியமற்ற பேச்சுவார்த்தை மூலம் மீறிச் சென்றால் லேசான தடியடி மூலமும் கலைந்து போகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியதன் மூலம் கேள்விக்கிடமற்ற வகையில் 6 பேரை கொலை செய்துள்ளார்கள். ஜாண்பாண்டியனுக்கு இமானுவேல் சேகரன் அவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செய்யும் உரிமையை மறுத்ததன் மூலம் வன்முறைக்கு போலிசார் வித்திட்டுள்ளனர். தவிறவும் ஜாண்பாண்டியனை வல்லநாடு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதன் மூலமே தலித் மக்கள் ஆவேசமடைந்து பரமக்குடி, மதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த கோபமுற்ற மக்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதோடு எந்த விதமான எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் சுடுவதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.
* ஆறு பேர் போலீசால் கொல்லப்பட்டு விட்ட நிலையில் இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் எல்லாம் அவர்கள் வன்முறையை ஏவினார்கள். வேறு வழியில்லாமல் போலீஸ் சுட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளதோடு, தாக்கப்பட்ட , தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்களையும் பெரிது படுத்தி புகைப்படச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்களையோ, சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் தரப்புகளையோ முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இந்த நிலை சட்டக் கல்லூரி தாக்குதல் சம்பவத்தில் தமிழ் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் போன்றதுதான்.
* கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் தமிழகத்தில் அதிகாரம் பெற்று விட்ட நிலையில் அவர்கள் ஊட்டி வளர்த்ததுதான் இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அரசியல். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை குறி வைத்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வளர்ந்து வந்த நிலையில் அதிமுக தென் தமிழக தேவர் வாக்கு வங்கியை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி ஒட்டுகளை கைப்பற்ற திமுக பல் வேறு முயர்சிகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் 2007- ல் பசும் பொன் முத்துராமலிங்கன் என்பவரின் பிறந்த நாளை மூன்று நாள் விழாவாக அரசே கொண்டாடியது. இது தலித் மக்கள் மனங்களில் தீராத வேதனையை உருவாக்கியுள்ளது. தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பை கைவிட்ட திராவிட இயக்கங்கள் அவரது சமூக நீதி அம்சங்களை உள்வாங்கி அதை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு விரிவு படுத்தியதோடு, எந்தெந்த தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அதை ஊட்டி வளர்த்ததன் விளைவுதான் இத்தகைய தாக்குதல்கள். அரசு, போலீஸ்ம் அதிகாரிகள் என கடந்த முப்பதாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி சகல தளங்களிலும் விரிவு படுத்தப்பட்டது. இதுவே பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அரசு நிர்வாகத்தில், போலீசில் நீதி கேட்கவோ, பாதிப்புக்கு நியாயம் கேட்கவோ முடியாத நிலையை தோற்று வித்துள்ளது.
*தமிழ் தேசிய இயக்கங்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கத்திற்கும் தமிழ் குழுக்களுக்குமான முரண் என்பது அவர்கள் தென் மாநிலங்களில் அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைத்துக் கொள்கிறார்கள். தமிழனை தமிழனே ஆளட்டும் வந்தேரிகள் எல்லாம் ஓடட்டும் என்பதுதான் தமிழ் குழுக்களின் அணுகுமுறை. தமிழர்களின் மலங்களை காலம் காலமாக தங்கள் தலையில் தூக்கிச் சுமந்த அருந்ததிய மக்கள் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எப்படி திராவிட இயக்கத்தின் தலைமை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் அதிகாரமாக உள்ளதோ அது போன்றே தமிழ் தேசியக் குழுக்களும், இதை தலித்துக்கள் அனுபவ பூர்வமாக உணர்கிறார்கள். இவர்கள் ஈழம், தமிழ் மொழி, என்று போராடுகிறார்களே தவிற தமிழர்களின் வேறு எந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதும் இல்லை குரல் கொடுப்பதும் இல்லை.
முருகன்,சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக மட்டுமல்ல அப்சல்குரு, கஸாப், உள்ளிட்ட அனைவருக்காகவும் குரல் கொடுப்பதோடு இந்தியாவிலிருந்தே மரணதண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதுதான் முற்போக்கு மனித உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்கை. பாராளுமன்றத் தாக்குதலில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்ட பேரா.கீலானி வேலூருக்கு வந்து மூவரையும் சந்தித்து மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் அப்சல் குரு குறித்தோ, கஸாப் குறித்தோ மறந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசி விட மாட்டார்கள். காரணம் இந்து முன்னணி கும்பலையும் அர்ஜூன்சம்பந்த் போன்ற இந்துப் பாசிஸ்டுகளையும் பகைத்துக் கொள்ள நேரிடுமே என்ற அச்சம். பெரியார் திக, தோழர் தியாகு, கொளத்தூர் மணி உள்ளிட்ட வெகு சில அமைப்புத் தலைவர்களைத் தவிற பெரும்பலான தமிழ் தேசியவாதிகள் தலித் சாதி ஒடுக்குமுறைகள் குறித்து எப்போதுமே பேசியதில்லை. நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்டால் எங்களை ஏன் கேட்கின்றீர்கள் கொன்றவனைப் போய் கேளுங்கள் என்கிறார்கள்.
* திராவிட இயக்கத்திற்கும் தமிழ் தேசிய இயக்கத்திற்குமான வேறு பாடு என்பது துளியளவுதான். அதிகாரத்தில் இருக்கும் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய இந்து மதத்திற்கு நெருக்கமான அதிமுகவாக இருந்தாலும், பச்சைத் தமிழ் திராவிட இயக்கம் என்று சொல்லக்கூடிய திமுகவாக இருந்தாலும் இவர்களின் அதிகாரத்தால் பலன் அடைவது பார்ப்பனர் அல்லாத முற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும்தான். திராவிட இயக்கத்திற்கென குறைந்த பட்ச சமூக சீர்திருத்த கோட்பாடுகள் உள்ளன. தமிழ் தேசியத்திற்கு அது கூட இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தால் அதிகாரம் பெற்று அரசு நிர்வாகத்தில் வீங்கிச் செல்லும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட குறிப்பாக தேவர் சாதி அரசியலே தமிழ் தேசியத்தையும் வழி நடத்துகிறது. இன்றைக்கு திருமாவளவன் தலித்தே என்றாலும் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதையும் அவர் தார்மீக நெறிகளுக்கு அப்பால் நூறு தள்ளி நிற்கிறேன். 200 அடி தள்ளி நிற்கிறேன் நாம் இணைந்து ஈழ மக்களுக்காக உழைக்கலாம் என்று தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதும் தமிழ் தேசியவாதிகள் திருமாவை ஒதுக்கி வைப்பதையும் காண முடிகிறது. மௌனம் என்பது எவளவு பெரிய வன்முறை என்பதை தமிழ் தேசிய குழுக்களின் அணுகுமுறைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
* தலித்துக்கள் மீதான இந்த மரணதண்டனையை, இனப்படுகொலையை எவன் ஒருவன் கண்டிக்கத் தயங்குகிறானோ அப்போதே அவன் பயங்கரவாத இலங்கை அரசை கண்டிக்கும் உரிமையை இழந்து விடுகிறான். மூவருக்கும் மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லுகிற ஒருவன் தலித்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட விரோத மரணதண்டனைக்கு எதிராகவும் பேசத் தவறுகிறான் என்றால் அவன் பகுத்தறிவுக்கு புறம்பானவனாக போலி முற்போக்காளனாக வாழ்கிறான் என்று பொருள்.
* மாணவர் பழனிக்குமாரை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தலித்துக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள், உத்தரவிட்ட அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மிக முக்கியமாக தென் மாவட்ட அரசு அதிகாரிகள், போலீசார், போலீஸ் அதிகாரிகள் சொந்த ஊரில் இருந்து மாறுதல் செய்யப்பட்டு அவர்களை சென்னை போன்ற நகரங்களில் பணியமர்த்துவதோடு, கலவரக் காலங்களில் வெளி மாநில போலீசாரைக் கொண்டு பதட்டச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். பெரும்பலான காவல்துறை அதிகாரிகள், போலிசார் தேவர் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை பல் வேறு உண்மையறியும் குழுவின் அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தேவர் சாதி போலீசுக்கு மிக முக்கிய பங்கிருப்பதையும் நாம் கொடியங்குளத்தில் தொடங்கி தாமிரபரணி படுகொலை, பரமக்குடி படுகொலை வரை புரிந்து கொள்ள முடியும். தலித்துக்களுக்கு போலீஸ், அரசு நிர்வாகத்தில் உரிய பங்கீடுகளை வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சாதியை போலீஸ் துறையில் கட்டுப்படுத்தும் படி சட்டம் இயற்றப்பட வேண்டும்.
* தேவர் சாதித் தலைவர் என்று சொல்லக்கூடிய முத்துராமலிங்கம் என்பவரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது போல தலித் மக்களின் தலைவரான இமானுமேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அல்லது முத்து ராமலிங்கத்தின் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும்.
* படித்தவர்கள் எல்லாம் சாதி பார்க்க மாட்டார்கள் என்ற தமிழனின் பொதுப்புத்தி இன்று உடைந்திருக்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளார்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த சாதியை மீற முடியாதவர்களாக இருக்கும் நிலையோடு அவர்கள் காக்கும் மௌனமும் இங்கே குறிப்பிடத்தக்கது.சொந்த சாதியை மறுத்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள்க்காக போராடும் பார்ப்பன நண்பர்களையும், தேவர் சாதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி நண்பர்களையும் நாம் பாராட்டுகிறோம். பல பத்தாண்டுகளின் பின்னர் இருண்ட மேகமாய் தலித் மக்கள் மீது பாய்ந்துள்ள தமிழக சாதி வெறி போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்போம்.
(நன்றி தலித்தியம்)
வீழ்வது தோல்வி அல்ல !!!
வீழ்ந்து கிடப்பதே தோல்வி !!!