மதுரை, செப்.14: பரமக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். பரமக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிருஷ்டவசமானது. ஒரு சில காவல்துறை அதிகாரிகளின் தவறால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. காவல்துறையினர் அளித்த அறிக்கையை முதல்வர் அப்படியே வாசித்தது தவறு.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அமைதிகாக்க வேண்டும்.
இவ்வாறு ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
பின்னர் வன்முறையில் காயமடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க அவர் புறப்பட்டுச் சென்றார்.