சனிக்கிழமை அன்று பழனிகுமார் என்ற பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பச்சேரி என்ற தனது கிராமத்துக்கு வரும் வழியில் வழிமறித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த மாணவர் தலித் சாதியினர்என்றும் இவரை தேவர் சாதியினர் வழிமறித்துக் கொன்றிருக்கிறார்கள் என்பதையும் ஒருவர் யூகிக்கலாம்.
இம்மானுவேல் சேகரன் - முத்துராமலிங்கத் தேவர் பற்றி ஓரளவுக்கு நாம் கேள்விப்பட்டிருப்போம். தேவர் சாதியினர் குருபூசை என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. (அவரது பிறந்த தினமும் இறந்த தினமும் ஒன்றே: அக்டோபர் 30.) இந்த தினத்தன்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளின் அரசியல்வாதிகளுமே பசும்பொன் என்ற அவர் பிறந்த ஊருக்குச் சென்று மலர் தூவி தேவர் சாதி வாக்குவங்கிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டு வருவது வழக்கம்.
அந்த வாரம் முழுவதுமே இந்தப் பகுதி பதட்டமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இந்தப் பகுதியில் வாழ்ந்ததில்லை; குறிப்பிட்ட இந்த மாதம், நாள் இந்தப் பகுதிக்குச் சென்றதுமில்லை.
சாதிப் பெருமை பேசுவது ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய சாதிகளுமே சங்கங்களையும் கட்சிகளையும் உருவாக்கி நடத்திவருகின்றன. ஆனால் தென் தமிழ்நாட்டில், முக்கியமாக தேவர்கள் சாதியைப் பொருத்தமட்டில், சாதிப் பெருமை சாதி வெறியாகி, தலித் சாதியினரைத் தாக்கிக் கொல்வதில் போய்த்தான் முடிகிறது.
எப்படி முத்துராமலிங்கத் தேவர், தேவர் சாதியினரின் அடையாளமாகத் திகழ்கிறாரோ அதேபோல தென் தமிழ்நாட்டில் இம்மானுவேல் சேகரன் தலித்துகளின் நாயகர் என்ற இடத்தில் உள்ளார். இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளை (11 செப்டெம்பர்) கொண்டாடிவரும் தலித்துகள், இந்த ஆண்டு இந்த தினத்தை இம்மானுவேல் சேகரன் குருபூசை என்ற பெயரிலேயே கொண்டாட முற்பட்டுள்ளனர். (இதற்கு முந்தைய வருடங்களில் இந்தப் பெயர் இருந்ததாக நினைவில்லை.)
ஒரு தலித் பள்ளி மாணவன் கொல்லப்பட்டது, இம்மானுவேல் சேகரன் குருபூசை என்ற இரண்டு கொந்தளிப்பான நிகழ்வுகளோடு மற்றொன்று சேர்ந்துகொண்டுள்ளது. கொலைக்குற்றத்துக்காகச் சிறைக்குப்போய் இந்த ஆண்டு சிறையிலிருந்து வெளியேவந்த ஜான் பாண்டியன் என்ற தலித் தலைவர் இந்த நிகழ்ச்சிக்கு வர முற்பட்டுள்ளார். அவர் வந்தால் கலவரம் அதிகமாகும் என்று நினைத்த காவல்துறை அவரை வழியிலேயே மடக்கி preventive detention-ல் வைத்துள்ளது. ஆனாலும் மக்கள் கொந்தளிப்பு காரணமாக காவல்துறை வண்டிகள் தாக்கப்பட, இதுபோன்ற நேரங்களில் காவல்துறை நடந்துகொள்வதுபோல அவர்களும் நடந்துகொள்ள பரமக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். [ஹிந்து | தினமணி]
கொல்லப்பட்ட அனைவரும் தலித்துகள்தான் (தேவேந்திர குல வெள்ளாளர்கள்?) என்று நாம் யூகிக்கலாம். செய்தித்தாள்கள் இந்தத் தகவலை நமக்குச் சொல்வதில்லை.
ஆக 6 தலித்துகள் கொலை அல்லது சாவு. தலித்துகள் அரசமைப்பைத் தமக்கு எதிரானதாகக் கருத மற்றுமொரு காரணம். தேவர் சாதியினருக்குத் தம் குலப்பெருமையை மீண்டும் நிலைநாட்டிய கௌரவம். ஜான் பாண்டியன் போன்ற ரவுடித் தலைவர்களுக்கு தலித் தலைமையைக் கைப்பற்றிக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு.
சிவில் சமூகத்துக்கு இதனை எதிர்கொள்வது எப்படி என்றே தெரிவதில்லை. தேவர் சாதியினர் (முக்குலத்தோர்) என்றாலே சரக்கென்று கத்தியை உருவி எதிராளியை (பெரும்பாலும் தலித்துகளை) போட்டுத்தள்ளும் வீர வம்சம் என்று சினிமாக்களும் தொடர்ந்து உருவேற்றி உருவேற்றி சில தலைமுறைகளே அழிந்துபோயுள்ளன.
இதே பகுதிகளில், தென் தமிழ்நாட்டில், ஐந்து பஞ்சாயத்துகளில் தலித்துகள் பஞ்சாயத்துத் தலைவர்களாக ஆக அனுமதிக்கப்படாமை, அப்படி மீறி ஆவோர் கொல்லப்படுதல், தொடரும் பதட்டம் என்பது வாடிக்கையாக இருக்கிறது. கல்வி, பிற மனித வளர்ச்சிக் காரணிகள் ஆகியவற்றில் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும் தமிழகத்தில் 2011-லும் மாற்றமே இல்லாமல் நடக்கும் தலித் விரோதத் தாக்குதல்கள் வருத்தத்தைத் தருகின்றன. இதே பிரச்னை, சென்னை சட்டக் கல்லூரி வரை வந்து தொலைக்காட்சியில் நேர்முக ஒளிபரப்பாக ஆகியதை நாம் பார்த்திருக்கிறோம். சில கேள்விகள் எழுகின்றன.
- தேவர் சாதியினர் மட்டும் அதீதமான தலித் விரோத மனப்பான்மை கொண்டிருப்பது ஏன்? (பொதுவாகவே அனைத்து சாதியினரும் இதே எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், மிக அதிகமாக இது வன்முறையாக வெளிப்படுவது தென் தமிழகத்தில், தேவர் சாதியினர் அதிகமாக இருக்கும் இடங்களில்தான்.)
- தலித்துகள் எந்தவிதத்தில் தேவர் சாதியினரின் பொருளாதார பலத்துக்குச் சவாலாக இருக்கிறார்கள்?
- இதே பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் மற்றொரு சாதியினரான நாடார்கள் ஒருவித buffer-ஆக இருந்து இந்தக் கலவரங்களைத் தடுக்க வாய்ப்புகள் ஏதேனும் உண்டா?
- தென் தமிழகத்தில் பெருமளவு பரவியிருக்கும் கிறிஸ்தவ மிஷன்களால் இந்தப் பிரச்னை குறைய வாய்ப்பே இல்லையா?
- தேவர் சமூகத்தினர் கல்வி அறிவைப் பெருக்கிக்கொள்ளும்போதும்கூட இப்படி நூற்றாண்டுக்கு முந்தைய இனக்குழு வெறி ஏன் குறைவதில்லை? தேவர் சமூகத்துக்குள்ளாக இந்த வெறிக்கு எதிரான குரல்கள் ஏன் எழுவதே இல்லை?
- வட தமிழகத்தில் வன்னியர்-தலித் உறவு ஏற்பட்டு நிலைமை ஓரளவுக்குச் சீராக ஆவதுபோல ஏன் தென் தமிழகத்தில் ஏற்படுவதில்லை?