மகா.,வில் தலித் பெண்ணை நிர்வாணமாக்கி கொடுமை?

மும்பை: தலித் சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் உயர் சாதி பெண்ணை காதலித்ததால், அவ்வாலிபரின் தாயை நிர்வாணமாக்கி, தெருவில் அழைத்துச் சென்று தாக்கினர். பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்ததால், அபாயக்கட்டத்தில் இருந்து தப்பினார். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில், கராடு பகுதியைச் சேர்ந்த தலித் வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த உயர்சாதி பெண்ணை காதலித்தார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி காதலர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், தண்ணீர் எடுக்கச் சென்ற அவ்வாலிபரின் தாயை நிர்வாணமாக்கி, தெருக்களில் அழைத்துச் சென்று பெண்ணின் வீட்டார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், அப்பெண் நிர்வாணமாக்கப்படவோ, தெருக்களில் அழைத்துச் செல்லப்படவோ இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண் கராடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றார். தற்போது அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், ""போலீசார் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அப்பெண் நிர்வாணமாக்கப்பட்டதாகவோ, தெருக்களில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால், அப்பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,'' என்றார்.