விருதுநகர்: தலித் இளைஞரை அடித்துக் கொலை செய்த போலீஸார் மற்றும் அவர்களுக்கு துணை போன போலீஸ் அதிகாரிகள் மீது உடனே நவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது புதுக்கோட்டை பாறைப்பட்டி. இந்த ஊரைரைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்று சின்னக்காளை என்பவரின் டிராக்டரை எடுத்துக் கொண்டு அழகாபுரி அருகே உள்ள வடுகபட்டி ஓடை வழியாகச் சென்றுள்ளார்.
அங்கு நத்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்கள், பாலமுருகனை வண்டியிலிருந்து கீழே இழுத்துப் போட்டு கையில் வைத்திருந்த கடப்பாறையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவரது மார்பு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய பாலமுருகன் மயங்கி தரையில் விழுந்துவிட்டார்.
அப்போது டிராக்டரை பின் தொடர்ந்து வந்த அதன் உரிமையாளர் சின்னக்காளை உடனே பாலமுருகனின் அண்ணனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். பின்பு கீழே விழுந்து கிடந்த பாலமுருகனை தூக்கியுள்ளார். அப்போது அவர் இறந்து போனது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உறவினர்கள் அனைவரும் பாலமுருகன் மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. பக்கத்து கிராமத்தினருக்கும், இவர்களுக்கும் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டார் என்றும் போலீசார் தவறான தகவலை கொடுத்துள்ளனர். மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த டிராக்டர் உரிமையாளர் சின்னக்காளையை சட்ட விரோதமாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளனர்.
காவல்துறையைச் சேர்ந்தவர்களே தலித் இளைஞரை அடித்துக் கொன்றுவிட்டு பிரச்சனையை திசை திருப்பும் வேலையை செய்து வருகின்றனர். இதனை சிபிஎம் விருதுநகர் மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, தலித் இளைஞர் கொலையில் ஈடுபட்ட 2 காவலர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் ஆகியோர் மீதும் வன்கொடுமை சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாலமுருகனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.