கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!

பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடும் போராட்டம் நடக்க இருக்கிறது. பதிவர்கள்-வாசகர்கள் அனைவரும் வருக!
கூடங்குளம்-மறியல்


                 மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சார இயக்கத்தினை மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் தோழர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டப் பகுதிகளில் மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரம், வெளியீடு, தெருமுனைக்கூட்டங்கள் ஆகிய வடிவங்கள் மூலம் கருத்துக்கள் மக்களை சென்றடைகின்றன.
சென்ற இடங்களிலெல்லாம் 99% மக்கள் எமது தோழர்களை ஆதரித்திருக்கின்றனர். பல கிராமங்களில் தங்க இடமும், உணவும் கொடுத்து தோழர்களை பராமரிக்கின்றனர். தெருமுனைக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் கணிசமான நிதியுதவியும் அளிக்கின்றனர்.
அதே நேரம் மின்வெட்டு பாதிப்பு, மின்சாரத் தேவை என்ற அரசு மற்றும் ஓட்டுக் கட்சிகளின் ஓயாத பிரச்சாரத்தால் மக்களில் பலர் குருட்டாம் போக்கில் அணு உலையை ஆதரிக்கின்றனர். இது நகர்ப்புறங்களில் வெளிப்படுகிறது. தோழர்கள் இதற்கு பொருத்தமக பதில் அளித்துப் பேசும் போது ஏற்கின்றனர். காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலிசார் எமது பிரச்சாரத்திற்கு சில தடைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் முறியடித்துத்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த பிரச்சார இயக்கத்தின் மைய நிகழ்வாக வரும் பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடுவது என்ற போராட்டம் நடக்க இருக்கிறது.
பேரணி துவங்கும் இடம்: பாளையங்கோட்டை மார்க்கெட் ஜவகர் திடல், திருநெல்வேலி.
நாள்: 11.02.2012 சனிக்கிழமை.
நேரம்: காலை 10.30
இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் குறிப்பாக தென்மாவட்டங்களில் இருக்கும் வாசகர்கள், பதிவர்கள் தமது நண்பர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு கோருகிறோம்.
கூடங்களும் அணு உலையை மூடக்கோரி ம.க.இ.க அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் சிறு வெளியீடு பல ஆயிரம் பிரதிகளாக தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம். அவர்களுக்கு அரசு, ஊடகங்கள், ஓட்டுக் கட்சிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து கூடங்குளம் அணு உலையை திறக்க முயற்சிக்கும் போது நாம் மக்களை நம்பி அதை தடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வரலாற்றுக் கடமையாற்ற உங்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.
இந்த மைய இயக்கத்தின் முழக்கங்கள்:
இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!
அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!
பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!
அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!
42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?
அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?
தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!
‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
தொடர்புக்கு:
அ.முகுந்தன் – 94448 34519 ,  வினவு – 97100 82506
_______________________________________________
மக்கள் கலை இலக்கியக் கழகம் – விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
 – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 
பெண்கள் விடுதலை முன்னணி
_________________________________________________