தேனி:தேனி மாவட்ட பள்ளிகளில், அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டில் பணியாற்றிய ஆசிரியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி விசாரணை நடத்தினார்.
ஆண்டிபட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரியா. இவருக்கு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தேனி மகாராஜா துவக்கப் பள்ளியில் கடந்த டிச., 7ல் ஆசிரியர் வேலை வழங்கப்பட்டது. அவரது, கல்விச் சான்றுகளை நிர்வாகம் வாங்கிக் கொண்டு, வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெற்றுள்ளது. அதில், எனது குடும்ப சூழ்நிலையால் ராஜினாமா செய்வதாக எழுதி உள்ளனர். இது நிர்வாக நடைமுறை என தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, டிச., 23ல் வேலையிலிருந்து நீக்கினர். காலிப்பணியிடத்திற்கு வேறு ஒருவரை நியமித்துள்ளனர்.
இதேபோல், தேனி அல்லிநகரம் முத்தையா நடுநிலைப் பள்ளியில், ஆண்டிபட்டியை சேர்ந்த ஜெயசுதா ஏமாற்றப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்திற்கு உடந்தையாக கல்வித் துறை அதிகாரிகளும்,வேலை வாய்ப்பு அலுவலரும் இருந்ததாக, முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டது. இம்மனுக்கள் மீது நேற்று விசாரணை நடந்தது.முதன்மைக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி, இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலையும், விளக்கம் அளிக்க பள்ளிகளுக்கு இரண்டு நாள் அவகாசம் வழங்கப்பட்டது