தன்னுடைய புகைப்படத்தை, சென்னை முழுக்க வரைந்துள்ள திருமாவளவன், அந்த பணத்தில் ஏழை தலித் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம் ?


தன்னுடைய புகைப்படத்தை, சென்னை முழுக்க வரைந்துள்ள திருமாவளவன், அந்த பணத்தில் ஏழை தலித் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட ஆறாவது மாநாடு, அம்பத்தூரில் நடந்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். அம்பத்தூர் நகர செயலர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.

இதில், மாநில செயலர் தா.பாண்டியன் பேசியதாவது:இன்று அனைத்துக் கட்சிகளிலும், முதலாளித்துவம் பெருகி விட்டது. இதற்கு, எந்த திராவிட கட்சிகளும் விதிவிலக்கு இல்லை. சிறுத்தைகள் கட்சியினர் கூட, தமிழகம் முழுக்க ஆங்காங்கே, அவர்களுடைய தலைவர் திருமாவளவன் புகைப்படங்களை சுவரில் வரைந்துள்ளனர்.ஒரு விளம்பரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய்:சென்னையின் பல்வேறு இடங்களில் இது மாதிரியான சுவர் விளம்பரங்களை, நாம் பார்க்க முடியும். சுவரில் விளம்பரங்கள் எழுதுகிறவர்களிடம், "அதற்கு எவ்வளவு செலவாகிறது?' என்று கேட்டேன். கிட்டத்தட்ட, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று சொன்னார்கள். அதை கேட்டு நான் பிரமித்து போய்விட்டேன். குறிப்பிட்ட பகுதிக்கு விளம்பரம் செய்ய இவ்வளவு ரூபாய் ஆகும் என்றால், தமிழகம் முழுக்க விளம்பரம் செய்ய, பல லட்ச ரூபாய் செலவாகும். அந்த பணத்தில், வறுமையில் வாடும், 100 தலித்துகளுக்கு, வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம். ஒரு முறை திருமாவளவனை நேரில் சந்தித்த போது, அதை அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர், "தொண்டர்களாகவே சுவர் விளம்பரம் செய்து கொள்கின்றனர்' என்றார். நம் கட்சியிலும், அது மாதிரியான செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
"நம் இயக்கத்திலும்முதலாளித்துவம்':ஒரு முறை, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் உறுப்பினருக்கு பாராட்டு கூட்டம் நடந்தது. அந்த பெண், அந்த கிராமத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்.

ஆனால், அவருடன் போட்டி போட்டு தோல்வி அடைந்தவர், பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்; பண பலமும் படைத்தவர். எனவே, "தேர்தலில் அதிக செலவு ஆனதா? என, அந்த பெண்ணிடம் கேட்டேன். "25 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகியது. ஆனால், தோல்வி அடைந்த அவருக்கு, 75 லட்ச ரூபாய் செலவாகியது' என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நமது இயக்கத்திலும், இது மாதிரியான முதலாளித்துவ போக்கு வளர்ந்து வருகிறது. பெரும் பணக்காரர்கள் வியக்கும் அளவில், கம்யூனிஸ்ட்களின் குடும்ப விழாக்கள் நடந்து வருகின்றன.அதை மாற்ற வேண்டும்.இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.