"பெயர் ஒன்றாய் இருந்ததால் தலித் மாணவன் கொலை"

உயர் சாதிக்காரப் பையன் ஒருவனின் பெயரும் இவன் பெயரும் ஒன்றாய் இருந்தது என்ற காரணத்துக்காக வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த பையன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான் என அம்மாநில பொலிசார் கூறுகின்றனர்.
பஸ்தீ மாவட்டத்தில் ராதாப்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்தக் கிராமத்தில் வாழும் ராம் சுமர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நீரஜ் குமார் தீரஜ் குமார் என்று இரு மகன்கள். இதே ஊரில் வாழும் ஜவஹர் சவுத்ரி என்ற உயர் சாதிக்காரருடைய மகன்களும் இதே பெயர்களைக் கொண்டவர்கள்.
பிள்ளைகளுக்கு ஒரே பெயர் அமைந்துபோனது இவ்விரு குடும்பங்களுக்கும் இடையில் நெடுநாளாக பிரச்சினைகளை தோற்றுவித்து வந்துள்ளது என பொலிசார் கூறுகின்றனர்.
உங்களுடைய மகன்களின் பெயர்களை மாற்றிவிடுங்கள் இல்லாவிட்டால் பிரச்சினைக்குள்ளாவீர்கள் என ஜவஹர் சவுத்ரி ராம் சுமரை எச்சரித்து வந்ததாக சப் - இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 22ஆம் தேதி இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, நண்பன் வீட்டில் போய் தொலைக்காட்சி பார்ப்பதாகச் சொல்லிவிட்டு சென்ற 14 வயதே ஆன நீரஜ் குமார் அன்றிரவு வீடு திரும்பவில்லை
அடுத்த நாள் ஒரு வயலிலிருந்து அவன் சடலாமாக மீட்கப்பட்டான்.
கழுத்து நெரிக்கப்பட்டதால் நீரஜ் உயிரிழந்துள்ளான் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சவுத்ரி குடும்பத்தின் நண்பர்கள் இருவர் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீரஜ் குமாரின் கொலையில் தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஜவஹர் சவுத்ரி கூறுகிறார்.
தங்கள் குடும்பத்துக்கு எதிராக பொலிசார் இந்தக் குற்றச்சாட்டை ஜோடித்துள்ளனர் என்று அவர் தெரிவிக்கிறார்.
ஜவஹர் சவுத்ரியின் இரு மகன்களும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.