தமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்

2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பிரபலமடைந்திருந்த அவர், தலித் இலக்கியம் குறித்த விவாதங்கள் தீவிரம் பெற்றிருந்த 1980 -90 களில் அதில் நேரடியாகப் பங்கேற்கவில்லை எனினும் '"அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம்'  "  ‘ பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்ற தனது மொழிபெயர்ப்பு நூல்களின் மூலம் அதற்குப் பங்களிப்புச் செய்தவர்.
1985 ஆம் ஆண்டு நான் பாண்டிச்சேரிக்குப் பணி மாறுதல் பெற்று வந்த சில மாதங்களிலேயே அவரது அறிமுகமும் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற எனது திருமண நிகழ்வில் வெளியிடப்பட்ட எனது கவிதை நூலான ‘ இதனால் யாவருக்கும்’ அவரது முன்னுரையோடு வெளிவந்தது. அவரது தம்பியும் தற்போது புகழ்பெற்று விளங்கும் திரைப்பட கலை இயக்குனருமான மஹி அந்த நூலுக்கு அட்டைப் படம் வரைந்து தந்தார்.
சாதியின் கொடூர நிழல் இருளாகக் கவியாத சென்னைப் பெருநகரச் சூழலில் பிறந்து வளர்ந்தவர் இந்திரன். ஓவியக் கலையோடு நெருங்கிய தொடர்புகொண்ட குடும்பம் அவருடையது. சாதிக் கொடுமைகளை அனுபவிக்காதவர் என்றாலும் சாதி குறித்த தெளிவு அவருக்கு உண்டு. மும்பையில் பணியாற்றியபோது அங்கு எழுச்சியோடு பரவிக்கொண்டிருந்த தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் செயல்பாடுகளையும், அதன் முன்னணியில் இருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர் நெருக்கமாக அறிந்தவர்.
1986 ஆம் ஆண்டு வாக்கில் தலித் இலக்கியத்துக்கென சிற்றிதழ் ஒன்றைத் துவக்கவேண்டுமென்று நானும் அவருமாக பாண்டிச்சேரி கடற்கரையில் அமர்ந்து முடிவுசெய்தோம். ‘அடையாளம்’ என்று அதற்குப் பெயரையும் தேர்வுசெய்தோம்.அதற்கான படைப்புகள் சிலவற்றையும் தொகுத்தோம். அதற்காக நான் ‘ காடாக சம்பு … ‘ எனத் தொடங்கும் கவிதை ஒன்றையும் எழுதித் தந்தேன். ( அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தற்போது நானும் அழகரசனும் தொகுத்து ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்தின்மூலம் வெளியிட்டிருக்கும் Tamil Dalit Anthology இல் இடம்பெற்றிருக்கிறது.) அந்த இதழை அச்சிடும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். தலித் இலக்கிய இதழ் ஒன்றை நடத்துவதில் அவருக்கிருந்த தயக்கத்தாலும், அந்த நேரத்தில் அவரது நண்பரகள் சௌந்தர் மற்றும் கதிர்வேலன் ஆகியோர் ஆரம்பித்த ‘பயணம்’ என்ற சிற்றிதழாலும் ’அடையாளம்’ வெளிவராமல் போயிற்று.அப்போது நான் எடுத்த முயற்சி செயல்வடிவம் பெற சுமார் பத்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. ‘தலித் ‘ என்ற பெயரில் நான் பத்திரிகையைத் துவக்கியதன்மூலமே அது நிறைவேறியது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளையும் கவனித்து வருகிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் பெரும்பாலும் தன்னார்வத்தின் அடிப்படையிலேயே அதைச் செய்கிறார்கள். ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்கள் அப்படியல்ல. அவர்கள் அதைத் தொழிலாகச் செய்கிறார்கள். நான் கவனித்த இன்னொரு விஷயம் : ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பலர் தலித்துகள்- இந்திரன், ரவிக்குமார், ராஜ்கௌதமன். பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டிருக்கும் சா.தேவதாஸ் ஒரு தலித் என யாரோ சொன்ன நினைவு. இதற்கு நேர் மாறாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பலர் பிராமண சமூகத்தவர்களாக உள்ளனர். அவர்களில் பலருக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்குத் தமிழ் தெரியவில்லை என்பது அவர்களது மொழிபெயர்ப்புகள் காட்டும் உண்மை.
சாகித்ய அகாதமி நிறுவனம் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் தமிழில் ஒரு தலித் எழுத்தாளருக்குக்கூட அந்தப் பரிசு தரப்படவில்லை என நான் அண்மைக்காலமாகக் குரலெழுப்பி வந்தேன். அது உரியவர்களின் காதுகளை எட்டிவிட்டதுபோலும் அதனால்தான் இந்திரன் இப்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்தத் தெரிவு எப்படி செய்யப்பட்டிருந்தாலும் இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியான ஒருவர்தான் அவர். இந்திரனை வாழ்த்துகிறேன்.