தலித் விரோத உத்தரவா? - மாயாவதி மீது தேர்தல் ஆணையம் சாடல்

புதுடெல்லி: மாயாவதி மற்றும் அவரது கட்சியின் சின்னமான யானை சிலைகளை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தலித் இன விரோதம் என்று கூறிய உத்தர பிரதேச முதல்வரை தலைமைத் தேர்தல் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. 

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்ட செய்தியில், 'அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ள மாயாவதி மற்றும் அவரது கட்சி சின்னமான யானையின் சிலைகளை மூடும் உத்தரவை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கை நியாயமற்றது. 

தலித் இன விரோத உத்தரவு என்ற மாயாவதியின் கருத்து தவறு. அரசியல் சட்ட அந்தஸ்து பதவி வகிக்கும் ஒருவர் இப்படி கூறுவது வருந்தத்தக்கது. சிலைகளை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு பரிசீலனை செய்ய மாட்டோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறுகையில், "மாயாவதி ஒரு மூத்த அரசியல் தலைவர். அவருடைய கருத்து பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அப்படி கூறுவதற்கு முன்பு அதுபற்றி அவர் சிந்தித்து இருக்க வேண்டும்," என்றார். 

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, கன்ஷிராம், மாயாவதி மற்றும் கட்சி சின்னமான யானை சிலைகளை துணியால் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், நொய்டா பூங்காவிலும் மற்றும் மாநிலம் முழுவதும் இவ்வாறு சிலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.