திசை மாறும் தலித் மாணவர்கள், இளைஞர்கள்.

இப்போதெல்லாம் தமிழ்  தமிழன்  தமிழ் நாடு என்று உசுப்பி விட்டால் போதும், போஸ்டர் ஒட்டுவதும், முன்னின்று போராடுவதும், தீக்குளிப்பு செய்வதும், ரெயில் மறியல்  பஸ் மறியல் என்று  சிறைக்கு சென்று வாழ்க்கையை தொலைப்பதும் பெரும்பாலானோர் தலித் மாணவர்களும் இளைஞர்களும் தான். ஆனால் வழக்கு வாய்தா என்று அவர்கள் அலையும் போது அவர்களுக்காகயாரும் முன்னின்று உதவுவது கிடையாது. அவர்களைப் பெற்றவர்கள்தான் பணம் செலவு செய்துகொண்டு இருக்கின்ற சொத்துக்களை இழந்தும் தவிக்கிறார்கள்.குடும்பமே தத்தளிக்கிறது. காவல்துறையின் வழக்கு அவர்கள் மீது  இருப்பதால் அரசு உத்தியோகமும் கிடைப்பதில்லை.  இந்த அரசியல்வாதிகளும் தங்கள் வளர்ச்சிக்கும், கூட்டம் காண்பிப்பதற்கும் அவர்களை ந்ன்கு பயன்படுத்திக்  கொள்கிறார்கள். அன்றைய ஆண்டான்  அடிமை அணுகு முறை இப்போது அரசியல் கட்சிகளிடம் வேறு வடிவில் உள்ளது.   அம்பேத்கார் இதற்காகவா பாடுபட்டார்?

மீனவர்கள் மீது தாக்குதல் என்றவுடன் ஆவேச அறிக்கைகள்,சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் என்று ஒரே உணர்ச்சிப் பிழம்பு மயம். அதே போல முல்லைப் பெரியாறு என்றவுடன் ஆவேசம் கொப்பளிக்க, நரம்பு புடைக்க அறிக்கைகள், நடை பயணங்கள் என்று அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. இவைகளை வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஆனால், ஏன் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும்? என்றுதான் கேள்வி.

தமிழ் நாட்டில் அண்மையில்  பரமக்குடியில் தலித்துகளின் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இவர்கள் செய்த போராட்டங்கள் என்ன? மருத்துவமனை விசாரிப்புகள் மற்றும் கடமையே என்று விடப்பட்ட அறிக்கைகள்.அத்தோடு சரி. சுட்டவன் தமிழன். சுடப் பட்டவனும் தமிழன். சுடப்பட்டது தமிழ் நாட்டில். சுட்டவர்கள் தமிழக ஆட்சியாளார்கள். இந்த ஆவேசம் மறியல் தலித் மக்களுக்காக  ஏன் செய்யப்பட வில்லை. அரசே முன்வந்த போதும் ஒரு கட்சியின் பொறுப்பாளர் நீதி விசாரணையே தேவையில்லை என்று அவையிலேயே சொன்னார். உள்ளாட்சி தேர்தல் வந்தவுடன் யாருடன் கூட்டு என்று எல்லாவற்றையும் மறந்து ஓடிப் போனார்கள்.  இன்று அரசியல் பண்ண போராட்டம் தேடி அலை பாய்கிறார்கள். கூடங்குளத்தை பிடித்துக் கொண்டு பரமக்குடியை விட்டு விட்டார்கள். இப்போது முல்லைப் பெரியாறு முழக்கம். தலித் தலைவர்களும் தலித் மக்களும் அடுத்தவர்களுக்காக போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் நடத்தும் அவர்களது உரிமை  போராட்டத்திற்கு மற்றவர்கள் முன்னிற்பதில்லை. இதுதான் இன்றைய அரசியல்.

தமிழ்  தமிழன்  தமிழ் நாடு என்று உணர்ச்சி பொங்க மற்றவர்களுக்காக போராடும் தலித்துகளே உங்கள் மக்களுக்கு ஒரு நீதி அடுத்தவர்களுக்கு ஒரு நீதி என்று  கடைபிடிக்கும் அரசியல்வாதிகளின் பிழைப்புக்கு தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள். தலித் மக்கள் எங்கிருந்தாலும்,  எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்கள் நிலைமை ஒன்றுதான். உங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதனைச் செய்யுஙகள். நீங்கள் முன்னேறினால் உங்கள் வழியே ஒரு தலைமுறை முன்னேறும்.  பல தலை முறைகள் முன்னேறினால், ஒரு சமுதாயமே முன்னேறும். வழக்கு வாய்தாக்களில் குடும்பத்தை பலிகடா ஆக்கி விடாதீர்கள்.