புகார்களை வாங்க கரூர் கலெக்டர் ஷோபனா மறுப்பு - தலித் மக்கள் முற்றுகை

கரூர்: புகார் மனு அளிக்க வந்த மக்களை கண்டுக் கொள்ளாத கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனாவை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை, கோட்டமேடு பகுதியில் தலித் மக்கள் சார்பில் 3 நாள் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும், இவர்களுக்கும் அடையே மோதல் ஏற்பட்டது.
இதில் கோட்டமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(16), சதீஸ்(20) உள்ளிட்ட 2 பேர் தாக்கப்பட்டனர். இது குறித்து தென்னரசு உள்ளிட்ட 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் 9 பேர் கைது செய்யப்பட்டு, குளித்தலை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கோட்டமேடு பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள் கரூர் கலெக்டர் ஷோபனாவிடம் மனு அளிக்க முயன்றனர். ஆனால் கலெக்டர் ஷோபனா அரசு அலுவலர்களுடன் கூட்டத்தில் இருப்பதால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த கலெக்டர் ஷோபனா காரில் ஏறி செல்ல முயன்றார். இதனால் ஆவேசமடைந்த தலித் மக்கள், அவரது காரை மறித்து முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய கலெக்டர் ஷோபனா தலித் மக்களின் மனுவை பெற்றுக் கொண்டு, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து முற்றுகையிட்ட தலித் மக்கள் கலைத்து சென்றனர்.