இந்திய தேசியக் கொடியை ஏற்ற முயன்ற தலித் பெண்ணுக்கு அடி உதை!

புதுக்கோட்டை அருகே குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்ற முயன்ற தாழ்த்தப்பட்ட பெண்ணான ஊராட்சித் தலைவரை அடித்து அவமானப் படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி கரு.வடதெரு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கலைமணி. பெண் தலித் ஊராட்சித் தலைவர் இவர். இவர் தேசியக் கொடி ஏற்ற முயன்றபோதுதான் இந்த அடி உதை சம்பவம் நடந்துள்ளது.
தலித் இன மக்கள் ஆட்சியமைப்பில் உரிய முக்கியத்துவம் பெறுவதை இன்னும் ஆதிக்க சாதி சக்திகள் எந்த அளவுக்கு எதிர்க்கின்றன என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
மனித குலத்தின் ஒரு பகுதி என தம்மை எண்ணிக்கொள்ளும் உயர் சாதி பார்ப்பன ஆதிக்க சக்திகள் சமூகவிரோதிகளே.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னத்துரை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கறம்பக்குடி ஒன்றியத்தில் நான்கு ஊராட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சியைத் சேர்ந்தவர்கள் தலைவர்களாக உள்ளனர். இதில் கரு.வடதெரு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கலைமணி அண்ணாத்துரை. இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது கணவர் அண்ணாத் துரை மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார்.
ஊராட்சித் தலைவர் கலைமணி அண்ணாத்துரையை குடியரசுதின விழாவில், கொடியேற்ற தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும், பாதுகாப்பு கோரி வடகாடு காவல் நிலையத்திலும், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரிடமும் கடந்த 19.1.2012 அன்று மனு கொடுத்தோம்.
இந்த நிலையில் குடியரசு தினத்தன்று ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முன்பு தலைவர் கலைமணி அண்ணாத்துரை தேசியக் கொடி ஏற்றும் போது துணைத் தலைவர் ரெங்கம்மாளின் மகன் குமார், வீராச்சாமி மற்றும் 20 பேர் கொண்ட கும்பல் திடீரெனப் புகுந்து, தலைவர் கலைமணியை சாதிப் பெயரைச் சொல்லி, இழிவாகப் பேசி தாக்கி தேசியக் கொடியை தாங்களே ஏற்றினர்.
அதே போல, ராஜா குடியிருப்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும் ஊராட்சித் தலைவரை கொடியேற்றவிடாமல் சாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்து தலைமை ஆசிரியரை கொடியேற்ற வைத்துள்ளனர். இச் செயல் சுதந்திர இந்தியாவின் தேசிய அவமானமாகும்.
முன்கூட்டியே புகார் தெரிவித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தலித் ஊராட்சித் தலைவரை தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.