தலித் வன்கொடுமை: 2011-ல் மிக அதிகம்

தமிழகத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமைகளும் படுகொலைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பினர் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடுகையில் 2011ம் ஆண்டு தான் அதிகமாக 44 படுகொலைகள் நடந்துள்ளதாக அந்த அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 3.9 சதவிகிதம் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்றும் தலித் மீதான வன்கொடுமையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான 'எவிடன்ஸ்' தலித்துகள் மீதான படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து களஆய்வையும் நடத்தியது. அதில் தான் இந்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2010ம் ஆண்டு 22 படுகொலைகளும், 2009ம் ஆண்டு 27 படுகொலைகளும், 2008ம் ஆண்டு 34 படுகொலைகளும் நடந்துள்ளதாக குறிப்பிடும் அந்த ஆய்வு, இந்த 2012ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வரை தலித் தலைவர் பசுபதிபாண்டியன் உட்பட 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இந்தப் படுகொலைகளுக்காக எந்த தலித் அரசியல் கட்சிகளும் வீருண்டு எழுந்து ஜனநாயகப் போராட்டங்கள் நடத்தவில்லை. என்றாலும் குறைந்தபட்சம் அரசுக்கு அழுத்தங்களாவது கொடுத்து இருக்கலாம். ஆனால் அதனையும் எந்தக் கட்சியும் செய்யவில்லை என்பது வேதனைக்குரியது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய எவிடன்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிர், "கடந்தாண்டு 336 சம்பவங்களை ஆய்வு செய்தோம். அதில் தான் இந்த அதிர்ச்சிகர தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. இதில் எட்டு பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது வேதனை தரும் செய்தி. ஆனால் இந்தப் படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகளுக்காக எந்த தலித் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தவில்லை. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை சின்ன பிரச்னை என்றாலும்கூட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல போராட்டம் நடத்தனர். ஆனால் இன்று அரசு நிறுவனங்களோடு சமரசம் செய்துகொண்டும் விலைபோயும் விட்டனர். அல்லது இத்தகைய படுகொலைகள் கண்டிக்கிற செயல்பாட்டில் ஒருவித சலிப்போடு தலித் அரசியல் கட்சிகள் உள்ளன. மேலும் இந்த துயரமான போக்கிற்கு காவல்துறையும், நீதித்துறையும் முக்கிய பொறுப்பு வகிக்கும் என்றாலும் அத்துறைகளை சரியாக இயக்க வைப்பதற்கான அரசியல் அழுத்தங்கள் கூட இங்கே இல்லை. கடந்த ஆண்டு 20 பாலியல் வன்புணர்ச்சி கொடுமைகள் நடந்துள்ளன. ஆனால் தண்டனை என்பது வெறும் 5.8 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவோர் 95 சதவிகிதம் பேர் தப்பித்துவிடுகின்றனர். தலித் மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம். அங்கு தான் வன்கொடுமைகளும் அதிகமாக உள்ளன. முதலிடத்தில் விழுப்புரம் மாவட்டமும் இரண்டாவது இடத்தில் விருதுநகர் மாவட்டமும் மூன்றாவது இடத்தில் மதுரை மாவட்டமும் உள்ளது" என வருத்தம் பொங்க பட்டியலிடும் அவர் மாநில அரசுக்கு சில பரிந்துரைகளையும் முன்வைக்கிறார்.
"இதன்மூலம் மத்திய, மாநில அரசுகள் வன்கொடுமைகளை ஒழிப்பதில் 1989ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதில் உரிய அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது. கடந்த திமுக ஆட்சியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட கண்காணிப்புக்குழுவின் முதல் கூட்டமே 2010ம் ஆண்டின் இறுதியில் தான் நடந்தது. இக்குழுவின் தலைவராக மாநில முதல்வர் இருக்கவேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே அதிமுக அரசு உடனடியாக கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி, அக்குழு திறம்பட செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யாத அதிகாரிகள் மீது அதே சட்டப் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்டத்திற்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். ஆதிக்க சாதிகள் குறுக்கீடு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அல்லது நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வன்கொடுமை ஒழிப்பு குறித்தும் சமத்துவம் குறித்தும் துவக்கப்பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒரு பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான் வருங்கால சமூகம் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் வளரும்" என்கிறார் அழுத்தமாக.