வி.ஏ.ஓ. தேர்வில் முறைகேடு புகார்: தலித் கட்சித் தலைவர் சிக்குகிறார்?



சென்னை, அக்.15-2011 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் தலித் கட்சித் தலைவர் ஒருவர் 600 பேருக்கு பரிந்துரை செய்திருக்கிறார்; வெள்ளிக்கிழமை நடந்த சோதனையில் இது தெரிய வந்திருப்பதால் அவரது தலையீடு குறித்துப் போலீஸôர் விசாரிக்க உள்ளனர்.  கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற உதவி பல் மருத்துவர் பணி,மோட்டார் வாகன ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், குரூப் 1 தேர்வு ஆகிய பணியிடங்களுக்குத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரின்பேரில் சென்னை லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தேர்வாணையத் தலைவர் ஆர். செல்லமுத்து, ஆணைய உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவரது வீடுகளில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.  இந்தச் சோதனையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரே அதிர்ச்சியடையும் அளவுக்கு பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 
தேர்வு அறை நுழைவுச் சீட்டு ஜெராக்ஸ், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோரின் இறுதிப் பட்டியல், வீட்டுமனை வரைபடங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.  இது தவிர இரு தேர்வாணைய உறுப்பினர்களின் வீடுகளில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாம். தேர்வாணைய உறுப்பினர் ஒருவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.26.3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாம். மொத்தம் ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சிக்குகிறார் தலித் அமைப்பு நிர்வாகி: அதேவேளையில் அண்மையில் வெளியிடப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தலித்துகளுக்கான 600 இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதும், ஒரு தலித் அமைப்பு நிர்வாகி தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாம். ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை லஞ்சமாகப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரிடம் விரைவில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.  9 மணி நேர விசாரணை: செல்லமுத்துவிடம் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடங்கிய விசாரணை அதிகாலை 4 மணி வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்றது. தேர்வாணைய உறுப்பினர்களிடம் இரவு 10 மணிக்கு விசாரணை முடிவடைந்திருக்கிறது. அவர்கள் அங்கிருந்து வெளியேற உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.  ஆனால் தொழில்நுட்பப் பணியாளர்களிடம் போலீஸôர் தீவிர விசாரணை செய்தனராம்.  இவர்களுக்குத் தெரியாமல் தேர்வு முடிவில் எந்த மாற்றத்தையும் அதிகாரிகள் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அவர்களிடம் இவ்வாறு விசாரணை செய்யப்பட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  கிடைத்த ஆவணங்கள் அடிப்படையிலும், விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையிலும் மேலும் சிலர் மீது வழக்குகள் தொடர்ந்திட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமணி