அருந்ததியர் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்!

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் சைதை ரவி இன்று திரு.வி.க. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 7 வார்டுகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அவருடன் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் ஆர்.மனோ உடன் சென்றார்.
அப்போது சைதை ரவி பேசியதாவது:

சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது இருந்த 155 வார்டுகள், 200 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. சென்னை மேயராக என்னை தேர்ந்தெடுத்தால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குறுகிய சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும்.

திரு.வி.க. நகர் பகுதியில் அதிகளவில் தாழ்த்தப்பட்ட மற்றும் அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை தரம் உயரவும், அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கவும் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அளிக்கும். மழை காலம் துவங்க உள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

பழுதடைந்த சாலைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு வடசென்னை பகுதியில் வரும் மழை காலங்களில் வெள்ளநீர் தேங்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு சைதை ரவி பேசினார். இன்று மாலை ஆலந்தூர், சோழிங்கநல்லுர், மடிப்பாக்கம் பகுதியில் சைதை ரவி பிரசாரம் செய்கிறார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் வாக்கு சேகரிக்கிறார்.