சிறுதாவூரில், தலித் இடத்தை அபகரித்தவர் ஜெயலலிதா ?




""தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் அமைந்துள்ள இடம், முறைப்படி வாங்கப்பட்டது. அந்த பத்திரத்தில், எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இதுகுறித்து, கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: அண்ணா அறிவாலய நில விவகாரத்தில், ஜெயலலிதா எனக்கு சவால் விடுத்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அறிவாலய இடம் 25 கிரவுண்ட் தானா, அதற்கு மேல் இருந்தால், அதை அரசுக்கு ஒப்படைக்கத் தயாரா என, கூறியிருக்கிறார். அந்த பத்திரத்தில் காணி கணக்கில் எழுதப்பட்டுள்ளது. ஒரு காணி என்பது, ஒரு ஏக்கர் 33 சென்ட் என்பதை நான் கணக்கிட்டு, ஏறத்தாழ 25 கிரவுண்ட் என்று கூறினேன். முழு இடமும், 25 கிரவுண்ட் என நான் கூறவில்லை. சிறுதாவூரில், தலித் இடத்தை அபகரித்தவர் ஜெயலலிதா என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்; கொடநாடு எஸ்டேட்டில் மாளிகை கட்டி, மக்களுக்காக பாதை விட மறுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின்னும், செயல்படுத்தாமல் இருப்பவர் என்பதை மறக்க முடியுமா?


அண்ணா அறிவாலய நிலம் எனக்காகவோ, குடும்பத்திற்காகவோ வாங்கப்பட்டதல்ல; தி.மு.க., அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டது. தி.மு.க., அறக்கட்டளையில் எம்.ஜி.ஆரும் ஒருவர். நிலத்தை மிரட்டி வாங்கியதை அவர் எதிர்த்ததால், 1972ல் அவரை கட்சியிலிருந்து நீக்கினர் என, ஜெயலலிதா கூறியுள்ளார். அண்ணா அறிவாலய நிலம் வாங்கிய அறக்கட்டளை பத்திரத்தில், எனது பெயர், நெடுஞ்செழியன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலத்தை மிரட்டியோ, வலியுறுத்தியோ வாங்கவில்லை என, சர்க்காரியா கமிஷன் தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் ஜெயலலிதாவிடம் கூறியதை தவறாக புரிந்து கொண்டு, அண்ணா அறிவாலயம் பற்றி குற்றஞ்சாட்டி, திருச்சியில் பேசிவிட்டு, அதற்கு ஆதாரப்பூர்வமாக நான் பத்திரத்தையே காட்டி, பதில் கூறியதும், மழுப்பலாக எதை எதையோ பதில் சொல்லி, ஜெயலலிதா தப்பிக்க பார்க்கிறார் என்பதைத் தான், அவருடைய பேச்சு சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.