திராவிடக் கட்சிகள் தலித்துகளுக்கு துரோகம் இழைத்துள்ளன – தொல் திருமாவளவன்.


சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 06 அக்டோபர் 2011 09:42
தமிழக அரசியல் சூழலில் பல ஆண்டு காலமாக தலித் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தராமல், வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தலித் மக்களின் குரலை புறக்கணிக்க முடியாத சக்தியாக மாற்றிய அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட பிறகு நேர்காணல் தொடங்கியது.

உங்கள் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்.

வறுமையான குடும்பத்தைச் சார்ந்தவன். ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்.  அப்பாவைத் தவிர குடும்பத்தில் அம்மா,  மூத்தோர்கள், முன்னோர்கள் யாரும் கல்வி வாசனை அறியாதவர்கள்.  அப்பா அந்த காலத்தில் 8ம் வகுப்பு வரை படித்தவர். அவருடைய தனிப்பட்ட முயற்சியில் நான் கல்லூரி வரை படிக்கிற வாய்ப்பைப் பெற்றேன். அரசியல் ஈடுபாடு என்னுடைய குடும்பத்தில் எனக்கு முன்பு யாருக்கும் இருந்தது கிடையாது.  சென்னையில் மாநிலக் கல்லூரியில் நான் படிக்கிற காலத்திலிருந்து, அரசியல் ஆர்வம் எனக்கு ஏற்படத் தொடங்கியது. பெரியாரிய அம்பேத்கரிய அரசியலை அறிவதற்கான சூழல் ஏற்பட்டது. 1983லிருந்து ஈழத் தமிழர் பிரச்சினை வெடிக்கத் தொடங்கியது. மாணவர்களோடு இணைந்து ஈழத் தமிழருக்கான போராட்டங்களில் நான் பங்கேற்கத் தொடங்கினேன். இப்படித்தான் என்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியது. மதுரையில் 1988ல் அரசுப் பணியாளராக நான்  வேலைக்குப் போனேன். அங்கு தான் எனக்கு தலித் அரசியல் தலித் பேன்ந்தர் இயக்கும் மூலமாக அறிமுகம் ஆனது.  அதனுடைய அமைப்பாளர் மறைந்த மலைச்சாமி அவர்கள் அந்த அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்தினார். என்னோடு பழகிய ஒரு வருட காலத்தில் அவர் காலமாகி விட்டார். அவருக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்ததன் மூலம் தலித் அரசியலில் நான் தீவிரமாக இறங்க நேர்ந்தது.  இன்றைக்கு தலித் அரசியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தவிர்க்க இயலாத அரசியல் சக்தியாக வளர்ந்து நிற்கிறது.
 
சவுக்கு :  ஒரு அரசுப் பணி என்பது தலித்துகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.  மிகவும் நேசிக்கக் கூடிய ஒரு விஷயம்.  அந்தப் பணியை விட்டு விட்டு நீங்கள் தலித் இயக்கத்தில் இறங்கும் போது ஒரு பெரிய அரசியல் சக்தியாக நீங்கள் வருவோம் என்று நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், தேர்தல் அரசியலில் இறங்குவோம் என்ற திட்டம் அப்போது உங்களுக்கு இல்லை. ஆக அரசுப் பணியை தூக்கி எறிந்து விட்டு, தலித்துகளுக்காக போராட வேண்டும் என்று உங்களை தூண்டியது எது ?
அரசுப் பணி என்பது நீங்கள் சொன்னது போல, ஒடுக்கப் பட்ட சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.  நான் சட்டம் படித்த 1985-88 காலத்தில், இறுதி ஆண்டு படிக்கையில் எனக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம்,  நேர்காணல் அழைப்பு வந்தது.  சென்னையில் கலங்கரை விளக்கம்  அருகே இருக்கக் கூடிய தடய அறிவியல் அலுவலகத்துக்கு நான் அழைக்கப் பட்டேன். வேலை கிடைக்கும் என்று நான் நம்பிப் போகவில்லை.  ஆனால் வேலை கிடைத்தது. சட்டப் படிப்பை தொடர்ந்து நான் வழக்கறிஞராவதா, அல்லது அரசுப் பணியை ஏற்பதா என்ற சூழலில் குடும்ப வறுமை காரணமாகவும், குறிப்பாக அப்பாவின் விருப்பத்தின் காரணமாகவும், நான் அரசுப் பணியில் சேர்ந்தேன். பிறகு சட்டப் படிப்பை முடித்தாலும்வ கூட நான் வழக்கறிஞராக பதிவு செய்யவில்லை.  அரசுப் பணியாளராகவே தொடர்ந்தேன். 1988 முதல் 1999 வரை, தடய அறிவியல் துறையில் அறிவியல் உதவியாளர் நிலை-2 ஆகப் பணியாற்றினேன். நீங்கள் கூறியது போல, இதை ஒரு தேர்தல் கட்சியாக மாற்ற வேண்டும் என்று தொடக்கத்தில் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு சமூக இயக்கமாக இதை வளர்த்தெடுக்க வேண்டும். கல்வி மற்றும் பொருளாதார தளங்களில் தலித் இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சியை உருவாக்க வேண்டும், சாதீய வன் கொடுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற போர்க்குணத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது எனது முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தென் மாவட்டங்களையும் தாண்டி, வடமாவட்டங்களிலும் விரவிப் பரவி வளரத் தொடங்கிய நிலையில், குறிப்பாக, கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் அரச வன்கொடுமைகள் எமது இயக்கத்திற்கு எதிராக தலை தூக்கின. இயக்கத் தோழர்கள் மீது பொய் வழக்கு போடுவது, கைது செய்வது, குண்டர் சட்டங்களில் அடைப்பது என 97, 98 காலகட்டத்தில் தீவிரமாக இருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் என்றாலே பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், நக்சலைட்டுகளுக்கு அடைக்கலம் தருகிறவர்கள் என்கிற ஒரு பார்வை அன்றைக்கு காவல்துறையிடம் இருந்தது.  இதனால் வெகுஜன மக்கள் மத்தியில் இந்த கருத்துப் பரவி, விடுதலைச்  சிறுத்தைகள் என்றாலே தலித் மக்களே அச்சப் படுகிற ஒரு சூழல் அன்றைக்கு இருந்தது. இதன் விளைவாக எமது இயக்கம் தேர்தல் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்தது. இதனால் மாநில செயற்குழுவைக் கூட்டி, இது குறித்து முன்னணித் தோழர்கள் விவாதித்தார்கள். இதனால் 1999 தொடக்கத்தில் விழுப்புரத்தில் நடந்த மாநிலச் செயற்குழுவில், தனிப்பட்ட முறையிலே எனக்கு உடன்பாடு இல்லாத நிலையிலும் கூட, கட்சி தேர்தல் அரசியலில் ஈடுபடலாம் என்ற முடிவு எட்டப் பட்டது.  தேர்தல் அரசியலில் எத்தகைய நெருக்கடிகளெல்லாம் எதிர் கொள்ள வேண்டி வரும் என்ற யூகம் இருந்ததனால் கூட ஓர் அச்சம் இருந்தது.  அத்துடன், அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி, நம்மால் ஒரு சக்தியாக வளர முடியுமா, நம்மை அங்கீகரிப்பார்களா என்ற தயக்கமும் இருந்தது. ஆனாலும் 1999ம் ஆண்டு மூப்பனார் அவர்களோடு சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்க வேண்டி வந்தது. அந்தச் சூழலில், ஒரு பொது அங்கீகாரம் கிடைப்பதற்கான சூழல் உருவானது. தலித் அல்லாதோரும் இந்த இயக்கத்தை நேசிக்கிற அளவுக்கு மூப்பனார் தலைமையிலான அந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நன்மதிப்பை பெற்றது.  நானே வேட்பாளராக நிற்கிற ஒரு சூழல் ஏற்பட்டது.  அப்போதுதான் என்னுடைய அரசுப் பணியை இராஜினாமா செய்ய முன் வந்தேன்.      குறிப்பாக மூப்பனார் என்னை இராஜினாமா செய்ய சொன்னார்.   நான் கடந்த 10 ஆண்டு காலம் தேர்தல் அரசியல் வேண்டாம் என்று பரப்புரை செய்திருக்கிறேன். நானே வேட்பாளராக நிற்பது எனக்கு ஏற்புடையதல்ல என்று அவரிடம் கூறினேன். ஆனால் மூப்பனார் அவர்கள் அரசுப் பணியை துறந்து விட்டு வாருங்கள். தேர்தலில் போட்டியிடுங்கள் என்றார். அதன் படி, நான் அரசுப் பணியை இராஜினாமா செய்து விட்டு, வேட்பாளராக நிற்க நேரிட்டது. இந்த அரசு வேலையின் மூலம் கிடைத்த சம்பளத்தை, நான் முழுக்க முழுக்க கட்சியை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தினேன். என்னுடைய சுற்றுப்  பயண செலவுகளுக்கும், உணவு, உடை போன்ற செலவுகளுக்கும் அந்தச் சம்பளத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். குடும்பத்தினருக்கு கூட செலவழிக்க முடியவில்லை.  ஆனாலும் ஒடுக்கப் பட்ட மக்களை ஒரு அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதற்கு நானே வேட்பாளராக நிற்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்றுக் கொண்டு, அரசுப் பணியை ராஜினாமா செய்தேன். அந்த தேர்தலில் இரண்டேகால் இலட்சம் வாக்குகளைப் பெற்றதன் மூலம் மக்களின் அங்கீகாரம், குறிப்பாக தலித் மக்களின் அங்கீகாரம் எனக்கும் இந்த இயக்கத்திற்கும் கிடைத்தது.
 பெரும்பாலான தலித் அமைப்புகள், இரு திராவிட கட்சிகளுக்குள் கரைந்து, காணாமல் போயிருந்த சூழலில், 1988ல் தலித் இயக்கத்தில் உங்களை நீங்கள் இணைத்துக் கொள்ளும் போது, இன்றைக்கு இருப்பது போன்ற அங்கீகாரமும், வளர்ச்சியும் ஏற்படும்,
DSC_6658

சவுக்கு: தலித் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தீர்களா ?

அப்படி நான் நினைக்கவில்லை.  நான் முன்பே சொன்னது போல, தேர்தல் அரசியலுக்குப்போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் கிடையாது. தென்மாவட்டங்களில், நான் அதிர்ச்சி அளிக்கக் கூடிய நிகழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. சாதாரண பிரச்சினைகளுக்கு கூட, வெட்டு, குத்து, கொலை என்று போகும் அளவுக்கு சாதி வெறியாட்டம் தலைவிரித்தாடுவதை நான் கண்டேன். வடமாவட்டங்களில் அதுபோன்ற அனுபவங்களை நான் சந்திக்கவில்லை. இந்த வன்கொடுமைகளை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும் என்ற அளவுக்கு இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவலாக இருந்தது. வாக்கு வங்கியை பற்றி நான் சிந்திக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

சவுக்கு : தலித் மக்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை இரண்டு திராவிட கட்சிகளுமே வழங்கவில்லை என்று நினைக்கிறீர்களா ?
நூற்றுக்கு நூறு உண்மை. தமிழகத்தில், மக்கள் தொகை அடிப்படையிலே கணக்கெடுத்துப் பார்த்தால், தலித்மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பார்த்தாலே தாழ்த்தப் பட்டவர்கள் 19 சதவிகிதம், பழங்குடியினர் 1 சதவிகிதம், ஆக மொத்தம் 20 சதவிகிதம். மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பாகம் உள்ள மக்களின் வாக்கு வங்கி தொடர்ந்து காங்கிரசு மற்றும் திராவிடக் கட்சிகளால் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் காங்கிரஸ், அதன் பிறகு திமுக, பிறகு அதிமுக என்று மாறி மாறி, தலித் மக்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்திக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் தலித் அமைப்புகள் திட்டமிட்டே முழுமையாக புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன.  எம்ஜிஆர் அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு 1977இல் குடியரசுக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி வழங்குகிற முறையை தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு, சாதி இந்துக்களின் தலைமயில் உருவான சமூக இயக்கங்களுக்கு அல்லது அரசியல் கட்சிகளுக்கு, காங்கிரஸ் கட்சியும், திமுகவும் முக்கியத்துவம் கொடுத்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.  வன்னிய சமூகத்தைச் சார்ந்த மாணிக்க வேல் நாயகர், மற்றும் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சி, ஆகியோர் தலைமையில் நடத்திய காமன் வீல் பார்ட்டி மற்றும் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் காலத்திலேயே 30க்கும் அதிகமான இடங்களை ஒதுக்கி அவற்றில் வெற்றி பெறுவதற்கான சூழல் அன்றைக்கு இருந்தது. முழுக்க முழுக்க வன்னியர்கள் மட்டுமே இடம் பெற்ற கட்சிகள் இந்தக் கட்சிகள். தென் மாவட்டங்களைப் பொருத்தவரை முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் உருவான பார்வர்ட் ப்ளாக்  கட்சிக்கு அன்றைக்கு திமுக அல்லது காங்கிரஸ் போன்ற கட்சிகள், உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்கிறது.  ஆனால் அந்த காலத்திலேயே தலித்துகளுக்கான கட்சியாக இருந்த குடியரசுக் கட்சிக்கு 77ல் முதன் முறையாக எம்ஜிஆர் ஒரு இடம் ஒதுக்கினார். ஆனால் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பது நிபந்தனை. அன்றைய நாள் முதல், இன்றைக்கு வரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிற தலித் கட்சியாகத் தான் குடியரசுக் கட்சி இருந்து வருகிறது.

முதல் முறையாக 2001ல் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், புதிய தமிழகம் கட்சிக்கும் தலா 10 தொகுதிகள் வழங்குகிற நிலை ஏற்பட்டது.  1952 முதல் 2001 வரையிலும், தலித் கட்சிகள் திராவிடக் கட்சிகளால் அல்லது காங்கிரஸ் கட்சியால் அங்கீகரிக்கப் படவில்லை என்பதுதான் உண்மை.  2001ல் கூட, பெரிய கட்சிகள் அதிமுக அணியின் பக்கம் போய் விட்ட நிலையிலே தலித் கட்சிகள் என்று அடையாளப்படுத்தப் பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், புதிய தமிழகமும் திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கான சூழல் ஏற்பட்டது. இந்த இரண்டு கட்சிகளும் திமுக அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கூட, 1999லே நாடாளுமன்றத் தேர்தலில் மூப்பனார் கொடுத்த அங்கீகாரத்தின் மூலமே கிடைத்தது என்றால் மிகையாது.

சவுக்கு : அங்கீகாரம் என்பதை விட அந்தத் தேர்தலில் நீங்கள் பெற்ற வாக்குகள் உங்களை கணிசமான வாக்கு வங்கி, தேர்தல் வெற்றிக்கு நீங்கள் பயன்படுவீர்கள் என்று கருதியதாக சொல்லலாமா ?
திருமாவளவன் : அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வாங்கினார். நான் இரண்டேகால் இலட்சம் வாக்குகள் வாங்கினேன்.  அதற்குப் பிறகுதான் 2001லே, திமுக கிருஷ்ணசாமிக்கு 10, எங்களுக்கு தமிழகத்தில் 8 மற்றும் பாண்டிச்சேரியில் 2 என மொத்தம் 10தொகுதிகள் கொடுத்தார்கள்.  ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, தலித் மக்களின் வாக்கு வங்கி தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் உள்ளது.  தலித் வாக்காளர்களில் 99 சதவிகிதம் வாக்களிக்கக் கூடியவர்கள். தலித் மக்களைப் பொறுத்தவரை தேர்தல் அன்று, வேலைக்குச் செல்ல மாட்டார்கள். ஒரு காலத்தில் 100 சதவிகிதம் காங்கிரசுக்கு வாக்களித்துக் கொண்டிருந்தவர்கள், காலப்போக்கில் எம்ஜிஆருக்கான வாக்குகளாக சிதறினார்கள்.  பிறகு திமுகவுக்கும் மாறினார்கள்.  குறிப்பாக, தொடக்க காலத்தில், காமராஜர் காலத்தில், சேரிகள் என்றாலே அது காங்கிரஸ் தான்.  அது தென் மாவட்டங்களாக இருந்தாலும் சரி, வட மாவட்டங்களாக இருந்தாலும் சரி. காங்கிரசின் செல்வாக்கே மிகுந்திருந்தது. பின்னர் திராவிடக்கட்சிகள் இந்த அளவுக்கு இந்த வாக்கு வங்கியை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுக்கவில்லை.  அது திமுகவாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி. அதிமுகவாக இருந்தாலும் சரி இதே நிலைதான்.  காங்கிரஸ் கட்சியாவது கக்கன் போன்றவர்களுக்கு உள் துறை மற்றும் அறநிலையத்துறையை கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு அமைந்த திமுக மற்றும் அதிமுக அரசுகள், ஆதிதிராவிடர் நலத் துறையை மட்டுமே தலித்துகளுக்கு ஒதுக்குவார்கள்.  மீறிப் போனால் கால்நடை பராமரிப்புத் துறை அல்லது துணை சபாநாயகர் பதவியை வழங்குவார்கள்.

ஆனால், வாக்கு வங்கியை வைத்துப் பார்க்கும் போது, மக்கள் தொகையிலேயே குறைவாக உள்ள சமூகம் மற்றும் வாக்களிக்கக் கூட வராத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அமைச்சரவையில் மிக முக்கிய இலாக்காக்கள்  ஒதுக்கப் பட்டுள்ளன.  தற்போதைய அமைச்சரவையில் கூட, சாதி இந்துக்களுக்கு 15க்கும் மேற்பட்ட இடங்கள் அமைச்சரவையில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.  ஆனால் தலித்துகளுக்கு மூன்றே மூன்று இடங்கள் மட்டும் ஒதுக்கப் பட்டுள்ளன. ஆக தலித் மக்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றும் நிலை இன்றும் நீடிக்கிறது.   இதை ஒரு வகையில் திராவிடக் கட்சிகள் தலித்துகளுக்கு இழைக்கும் துரோகம் என்று சொல்லலாம்.

தொல் திருமாவளவனின் பரபரப்பான பேட்டி தொடரும்.