மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் பிரதமரை நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை





லக்னோ: ‘‘மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்தவரை பிரதமராக்கும் திட்டம் எதுவுமில்லை’’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்.
இது தொடர்பாக லக்னோவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஊழலை ஒழிப்பதில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், உத்தர பிரதேசத்தில் மாயாவதி அரசில் நடக்கும் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அவர் அப்படி செய்தால், காங்கிரசும் அதில் பங்கேற்கும். உண்ணாவிரதத்தில் நான் கூட கலந்து கொள்வேன். பலமான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரை காத்திருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த மசோதாவில் சேர்க்கும்படி அன்னா குழு தெரிவித்த 3 முக்கிய அம்சங்களை மத்திய அரசு ஏற்றுள்ளது. எனவே, நாடாளுமன்றத்துக்கு மதிப்பளித்து, அதன் முடிவுக்காக அன்னா பொறுத்திருக்க வேண்டும்.
மன்மோகன் சிங்குக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்தவரை பிரதமராக்கும் திட்டம் எதுவும் இல்லை. தனது ஊழல் ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பவே, தலித் பிரதமர் நியமிக்கப்படுவதாக முதல்வர் மாயாவதி தவறான தகவலை பரப்பி வருகிறார். 
இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.