புதுச்சேரி, நவ. 12: சந்தைபுதுக்குப்பம் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் தலித் சுப்பையா, பொதுச்செயலர் கோ. ராமசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: சந்தைபுதுக்குப்பம் தலித் மக்கள் பள்ளி, ரேஷன் கடை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் கிராமப் பகுதியைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் 23.10.2011-ல் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடந்து கலவரம் ஏற்பட்டது. தலித் மக்களுக்கு நில உடமையாளர்கள் வேலை கொடுக்காமல் இருக்கின்றனர். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின்கீழ் வேலையும் வழங்கப்படவில்லை. ரேஷன் கார்டுகளை துணை ஆட்சியரிடம் தலித் மக்கள் ஒப்படைத்துவிட்டனர். ஊரின் உள்ளே ரேஷன் கடை இருப்பதால் அங்கு சென்று ரேஷன் பொருள்களை வாங்க முடியவில்லை. அதனால் குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் பட்டினியால் பரிதவிக்கின்றனர். போதாக்குறைக்குக் கடுமையான தொடர்ச்சியான மழையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும் அங்கு அமைதி ஏற்படவில்லை. காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்குப் போட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 3 தலித் இளைஞர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். எதிர் தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்தக் கலவரத்தின் மீது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். அதில் மனித உரிமை கமிஷன், எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களும் இடம் பெற வேண்டும். துணை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். பிரச்னைகள் தீரும்வரை தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்குச் சட்டரீதியான நிவாரணம் வழங்க வேண்டும். அங்கு அமைதியான, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.