கோவை:"அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி, தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.கோவையில் நேற்று கிருஷ்ணசாமி கூறியதாவது:பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பலியான ஒன்பது பேர் குடும்பத்துக்கு, தலா ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; இமானுவேல் சேகரன் பிறந்தநாள், நினைவு நாளை, அரசு விழாவாக அறிவித்து நடத்த வேண்டும்.கல்வி, வேலைவாய்ப்பில், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்வதற்கான அதிகாரம், மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் முன் அனுமதியின்றி, இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் சிபாரிசு இல்லாமல், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் ஜாதிகளை சேர்க்கவோ, நீக்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ முடியாது.ஆனால், முந்தைய தி.மு.க., அரசு, தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீதம் இட ஒதுக்கீட்டில், 3 சதவீதத்தை அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்கி விட்டது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த உள் இட ஒதுக்கீடு, அரசியல் சாசனத்துக்கு முரண்பாடானது; அதை ரத்து செய்ய வேண்டும்.தனியாக மூன்று சதவீதம் பெறும் அருந்ததியர் சமூகத்தினர், மீதமுள்ள 15 சதவீதத்திலும் முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு பெறுகின்றனர். எனவே, மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில், தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் 77 ஜாதிகள் உள்ளன. இந்த தொகுப்புக்கு, "ஆதி திராவிடர் நலத்துறை' என்று தவறாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பெயரை மாற்ற வேண்டும்.பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, வாதிரியார் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சமூகத்தினரை, தேவேந்திர குல வேளாளர் என, ஒரே பெயராக மாற்றி அரசு உத்தரவிட வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் டிச., 6ல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மறியல், சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு, கிருஷ்ணசாமி தெரிவித்தார். dinamalar