ஆதிதிராவிடர் என்ற பெயர் சரிதானா என்று பேரவையில் விவாதம்

சென்னை, செப். 6-
அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என புதிய தமிழகம், கம்னினிஸ்டு, குடியரசு கட்சி உறுப்பினர்களிடையே சட்டசபையில் வாக்குவாதம் நடந்தது.
சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கையின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி (ஓட்டப்பிடாரம்):
எஸ்.சி., எஸ்.டி. துறையை தமிழகத்தில் மட்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்று அழைக்கிறார்கள். 90 சதவீத மாநிலங்களில் எஸ்.சி. எஸ்.டி. துறை என்றே அழைக்கிறார்கள். எஸ்.சி. பட்டியலில் 76 ஜாதிகள் உள்ளன. அதில் ஆதிதிராவிடர் என்பதும் ஒரு ஜாதியாகும். எனவே, 76 ஜாதிகளை உள்ளடக்கிய எஸ்.சி. துறையை ஆதிதிராவிடர் என ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரில் அழைப்பது தவறாகும். எஸ்.சி. என்பதை மொழிபெயர்த்து பட்டியல் இனம் என்ற அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் (கே.வி. குப்பம்):
ஆதி திராவிடர் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறிக்கும் சொல் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களையும் திராவிடர் என்று அழைக்கும்போது அதிக சலுகைகள் தேவைப்படுகிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை ஆதி திராவிடர் என்று அழைக்கலாம் என பெரியார் கூறியிருக்கிறார். தமிழக சட்டப் பேரவையிலேயே இந்தப் பெயர் ஏற்கப்பட்டுள்ளது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.சி.நாதனும் ஆதிதிராவிடர் என்று அழைக்கலாம் என கூறியுள்ளார். எனவே ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்
திமுக ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனித்துவம் மிக்க எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. இப்போது அதிமுக ஆட்சிக் காலத்தில் டெல்லி சிறப்புப் பிரதிநிதி, மாநிலங்களவை எம்.பி., இயல் இசை நாடக மன்ற செயலாளர் என பல பதவிகள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோருக்கு மணி மண்டபங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் கட்டப்பட்டன.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தொழிலதிபர்களாக்கும் வகையில், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் தனி தொழிற்பேட்டை பகுதிகள் அமைக்கப்பட்டன. அவை, திமுக ஆட்சியால் செயலற்ற நிலையில் உள்ளன. மீண்டும் அவற்றைச் செயல்படுத்த வேண்டும். நிலவள வங்கித் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு 5 ஆயிரம் பேருக்கு நிலம் வழங்க இலக்கு நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் நிதியில் 81 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 சதவீதம் மட்டும் மற்ற திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. எனவே, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கென தனி கல்வி இயக்ககத்தை உருவாக்க வேண்டும்.
அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக தமிழகத்தில் மட்டும் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்தாளும் வகையில் இது அமைந்துள்ளது. அருந்ததிய மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான உள்ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்திட வேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல் துறையின் சார்பில், பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் காளைமாடும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் உள்ள விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனால், காளை மாடுகளைப் பயன்படுத்தி விவசாயத்துக்கு ஏர் ஓட்டும் நிலையே தடை செய்யப்படக் கூடும். ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் அளவுக்கு மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி:
அருந்ததியருக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத உள் ஒதுக்கீட்டினால் 15 சதவீத தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 8-12-2010-ல் அண்ணா பல்கலைக்கழகம் 105 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. அதில் 37 இடங்கள் எஸ்.சி. பிரிவினருக்கும், 37 இடங்கள் அருந்ததியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 6-10-2010-ல் சென்னைப் பல்கலைக்கழகம் 92 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. அதில் 20 இடங்கள் எஸ்.சி. பிரிவினருக்கும், 20 இடங்கள் அருந்ததியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் இதுபோலவே நடந்துள்ளது. இதனால் 15 சதவீத தலித் மக்களுக்கு உரிய வாய்ப்புகள் பறிபோகின்றன. எனவே, இந்த உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அதில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொறடா கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்): அருந்ததியர் இன மக்கள், தலித் மக்களிலேயே மிகவும் பின்தங்கியிருப்பவர்கள். அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும். பின்னடைவு பணியிடங்களையும் நிரப்புவதால் சில இடங்களில் அருந்ததியர்களுக்கு கூடுதல் இடங்கள் அளித்ததுபோல தோன்றலாம்.
டாக்டர் கிருஷ்ணசாமி: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டினால் மற்ற தலித் சமுதாயத்தினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நான் சுட்டிக் காட்டினேன். பின்னடைவு பணியிடங்கள் என்றால் அதனைக் குறிப்பிட்டிருப்பார்கள்.
இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்: எஸ்.சி. எஸ்.டி. பட்டியலில் மாற்றம் கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஆந்திரத்தில் இதுபோன்ற உள் ஒதுக்கீடு கொண்டு வந்தபோது அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணைத் தலைவர் கே.பாலபாரதி (திண்டுக்கல்): காவல்துறை, வேளாண்மைத் துறை போல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனியாக மானியக் கோரிக்கை விவாதத்தை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் எஸ்.சி. எஸ்.டி. மக்களிடம் வேற்றுமையை உருவாக்க வேண்டாம் என்றார். இதோடு அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.