அருந்ததியர் உள் ஒதுக்கீட்டால் 15% தலித்துகளுக்கு அநீதி: கிருஷ்ணசாமி


சென்னை, செப். 5: அருந்ததியருக்கு அளிக்கப்பட்டுள்ள 3 சதவீத உள் ஒதுக்கீட்டினால் 15 சதவீத தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:
அருந்ததியருக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத உள் ஒதுக்கீட்டினால் 15 சதவீத தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 8-12-2010-ல் அண்ணா பல்கலைக்கழகம் 105 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. அதில் 37 இடங்கள் எஸ்.சி. பிரிவினருக்கும், 37 இடங்கள் அருந்ததியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 6-10-2010-ல் சென்னைப் பல்கலைக்கழகம் 92 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. அதில் 20 இடங்கள் எஸ்.சி. பிரிவினருக்கும், 20 இடங்கள் அருந்ததியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் இதுபோலவே நடந்துள்ளது. இதனால் 15 சதவீத தலித் மக்களுக்கு உரிய வாய்ப்புகள் பறிபோகின்றன. எனவே, இந்த உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அதில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொறடா கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்): அருந்ததியர் இன மக்கள், தலித் மக்களிலேயே மிகவும் பின்தங்கியிருப்பவர்கள். அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும். பின்னடைவு பணியிடங்களையும் நிரப்புவதால் சில இடங்களில் அருந்ததியர்களுக்கு கூடுதல் இடங்கள் அளித்ததுபோல தோன்றலாம்.
டாக்டர் கிருஷ்ணசாமி: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டினால் மற்ற தலித் சமுதாயத்தினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நான் சுட்டிக் காட்டினேன். பின்னடைவு பணியிடங்கள் என்றால் அதனைக் குறிப்பிட்டிருப்பார்கள்.
இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் (கே.வி. குப்பம்): எஸ்.சி. எஸ்.டி. பட்டியலில் மாற்றம் கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஆந்திரத்தில் இதுபோன்ற உள் ஒதுக்கீடு கொண்டு வந்தபோது அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துணைத் தலைவர் கே. பாலபாரதி (திண்டுக்கல்): காவல் துறை, வேளாண்மைத் துறை போல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனியாக மானியக் கோரிக்கை விவாதத்தை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் எஸ்.சி. எஸ்.டி. மக்களிடம் வேற்றுமையை உருவாக்க வேண்டாம் என்றார்.