தலித் சிறுமி கற்பழிப்பு: எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு




புதுடெல்லி, செப். 13-
உத்தரபிரதேச மாநிலம் பாண்டா தொகுதி எம்.எல்.ஏ. புருஷோத்தம் நரேஷ் திவிவேதி (வயது 48). பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 மற்றும் 11-ந் தேதிகளில் தனது வீட்டில் வைத்து 17 வயது தலித் சிறுமியை கற்பழித்தார். மறுநாளும் கற்பழிக்க முயன்றபோது அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடிவந்து விட்டாள். ஆனால், எம்.எல்.ஏ.வின் சகோதரர் அந்த தலித் சிறுமி மீது திருட்டு புகார் கொடுத்ததால், போலீசார் அவளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும், நீண்ட நாளைக்கு பின்னர், முதல்-மந்திரி மாயாவதியின் உத்தரவுக்கு பின்னர் திவிவேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி கற்பழிக்கப்பட்டது, திருட்டு பழி சுமத்தப்பட்டது குறித்து அரசு பாரபட்ச விசாரணை நடத்தாது. ஆகவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜாராம், இருதய நாதன் ஆகிய வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்குகள் தொடர்ந்தனர். நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தனர்.
அதில், "எம்.எல்.ஏ. திவிவேதி மீதான கற்பழிப்பு விசாரணையை உத்தரபிரதேச போலீசார் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். விசாரணை அறிக்கையை 6 வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். தலித் சிறுமி மீதான திருட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும். அவள் மீது பொய்யாக திருட்டு புகார் கொடுத்தது யார் என்று விசாரிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.