அருந்ததியர் சமூக்திற்குத் தமிழக அரசால் வழங்கப்பட்ட மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீடு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மாறானது என்றும், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் கூட வழக்குத் தொடரலாம் எனவும் சென்னையில், தலைமைச் செயலகத்தில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் என்.எம். காம்ப்ளே நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
அவரது பேச்சு ஏதோ ஓர் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்ற பேச்சைப் போலத் தெரிகிறதே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆணையத்தின் பொறுப்புள்ள துணைத் தலைவரின் பேச்சாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்தது பற்றித் தமிழக அரசு தங்களுக்குத் தெரிவிக்க வில்லை என்றும் கூறியிருக்கிறார்.
காம்ப்ளேயின் இந்தக் குற்றச்சாட்டிற்குத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அழுத்தமான விளக்கமொன்றை அளித்திருக்கிறார். “ஆதிதிராவிடர்களுள் மிகமிகப் பின்தங்கிய அருத்ததியர் வகுப்பினரின் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அவசியம் என்ற அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய, நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் கொண்ட ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை அடிப்படையில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதை நடைமுறைப் படுத்தும் முன், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத் தலைவர் பூட்டாசிங்கிற்கு 25.11.2008 இல் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருக்கிறார்.
“அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் அளித்த பேட்டியில் அவர்களுக்குத் தமிழக அரசு தெரிவிக்கவே இல்லை என்று சொல்லியிருக்கிறார். தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்திற்கு ஆணையத்தின் சார்பில் 19‡02‡2009 இல் பதிலும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதமும் உள்ளது. எனவே தமிழக அரசு அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறான செய்தி.
“அது மாத்திரம் அல்ல அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்வதுபற்றி, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் விதியிருக்கிறதே தவிர, அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதில் எந்தவிதக் கட்டாயமும் கிடையாது. அதனால்தான் தமிழக அரசின் சார்பில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்திற்கு இந்த உள் ஒதுக்கீடு பற்றி அறிவித்துவிட்டு அந்த ஆணையத்திடமிருந்து இதற்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில் ஒருநபர் குழு தலைவராக இருந்த ஜனார்த்தனத்தையும் கலந்து ஆலோசித்து, அதற்கு மேலும் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு செய்யக் காலதாமதம் செய்யக்கூடாது என்ற அக்கறையுடன் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டது,” என்ற முதல்வரின் விளக்கம், அருந்ததியர் முன்னேற்றத்தில் அவருக்கிருந்த அக்கறையையும், எடுத்த சரியான நடவடிக்கைçயும் தெளிவுபடுத்துகிறது.
உண்மையைச் சொன்னால் அருந்ததியர்களைப் பற்றி காம்ப்ளே மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட பலருக்குத் தெரியவில்லை. அருந்ததியர்கள் 17 ஆம் நூற்றாண்டில் ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்று சிலர் தவறாகப் பேசுகிறார்கள்.
முதலாம் குலோத்துங்கனின் பத்தாம் ஆட்சியாண்டில் வடிக்கப்பட்ட சதுர்வேதி மங்கலக் கட்வெட்டிலும், அதே கால கட்டங்களில் உருவான இடங்கை, வலங்கை சாதிப் பிரிவில் இடங்கைப் பிரிவிலும், 12 ஆம் நூற்றாண்டில் கவுண்டர்களுக்கு ராயர் அளித்த செப்புப் பட்டயத்திலும், 15 ஆம் நூற்றாண்டின் பேரூர் செப்புப் பட்டயத்திலும் இந்தக் காலகட்ட ஓலைச்சுவடிகளிலும் அருந்ததியர் பெயர் பதிவாகியிருக்கின்றது. இது 17 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம். இதைப் புரிந்து கொண்டால் அருந்ததியர் தமிழ்நாட்டினர், தமிழர்கள் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் 1,07,12,266. இதில் அருந்ததியர்கள் 32.5 விழுக்காடு. அதாவது தாழ்த்தப்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு, 35,00,000 பேர்கள். இவர்களின் கல்வித் தகுதி என்று பார்த்தால், பள்ளிக்குச் செல்லாமல் எழுத்தறிவு பெற்றவர்கள் 5.93 விழுக்காடு. தொடக்கக் கல்வி படித்தவர்கள் 1.75 விழுக்காடு. மெட்ரிக் மேல்நிலைக் கல்வி படித்தவர்கள் 0.16 விழுக்காடு. மொத்தத்தில் கல்வி பெறாதவர்கள் மட்டும் 92.16 விழுக்காட்டினர் அருந்ததியர்.
அரசுத் துறையில் அருந்ததியர்கள் முழு நேரப்பணியாளர்களாக 8.14 விழுக்காட்டினரும், பகுதிநேரப் பணியாளர்களாக 8.15 விழுக்காட்டினரும் மட்டுமே இருக்கின்றனர். நிலம் சார்ந்த அருந்ததியர் வாழ்க்கையைப் பார்த்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே சிறிது நிலம் வைத்திருக்கின்றனர். இவர்களை சதவீதத்தின் அடிப்படையில் கூட சொல்லமுடியாது. கூலி விவசாயிகளாக 22.79 விழுக்காட்டினர் இருக்கின்றனர். தவிர ஏறத்தாழ 25.51 விழுக்காட்டினர் பண்ணை அடிமைகளாக இருக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களில் சமூக அளவில் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் அருந்ததிய மக்களின் நிலை இதுதான். தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத் துணைத் தலைவர் காம்ப்ளேவிற்கு இவையயல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி என்பதும், அதற்காகத் தந்தை பெரியார், பேரறிஞர் அம்பேத்கர் போன்றவர்கள் போராடிய போராட்டங்கள் எல்லாம் காம்ப்ளேவிற்குத் தெரியவாய்ப்பில்லை. அதனால்தான் முதல்வர் கலைஞர் கொடுத்த மூன்று விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்குப் புறம்பானது என்றும் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்றும் பேசியிருக்கிறார்.
கருத்தற்ற காம்ப்ளேயின் பேச்சை மறுத்து, “தேசிய ஆதிதிராவிடர் நலத் தலைவரே இப்படி பேட்டியில் கூறியிருப்பது அருந்ததியர் சமூகத்திற்கு தீமை விளைவிக்கக் கூடியதாகும். எனவே அது மிகவும் வருத்தத்தைத் தரக்கூடிய ஒன்றாகும்” என்ற அருந்ததியர் பால் அக்கறை கொண்டிருக்கும் முதல்வர் கலைஞரின் மறுப்பறிக்கை ஆறுதலைத் தருகிறது.
இங்கே தலைவர் கலைஞர் அவர்களின் மேன்மைமிகு கவனத்திற்கு ஒருசெய்தியைக் கொண்டு வருவது சரியாக இருக்கும். நீதியரசர் அவர்கள் பரிந்துரையின்படி தமிழக அரசு வெளியிடட குறிப்பில், இந்த மக்கள் அருந்ததியர், சக்கிலியர் என்று இரண்டு பிரிவாக மட்டுமே கூறப்பட்டுள்ளனர். இது தலைவரின் கவனத்திற்குச் சரியாகக் கொண்டுவரப்படாத செய்தியாகும்.
அருந்ததியர், சக்கிலியர், மாதிகா, மாதாரி, பகடை, செம்மான் ஆகிய பெயர்களில் இருப்பவர்கள் அனைவருமே அருந்ததியர். தமிழக மேற்கு மாவட்டங்களில் வாழும் அருந்ததியர் மாதாரி என்றும் மாதிகா என்றும் அழைக்கப்படுகின்றனர். தென்தமிழ் நாட்டில் இவர்கள் பகடை, செம்மான் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் இவர்கள் அருந்ததியர் என்றும் சக்கிலியர் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். நீதியரசர் அறிக்கைப் படி, 7.5 லட்சம் அருந்ததியர், 7.5 லட்சம் சக்கிலியர், மொத்தம் இம்மக்கள் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
இங்கே விடுபட்ட மாதிகா, மாதாரி, செம்மான், பகடை ஆகிய பெயர்களில் வாழும்அருந்ததியர் மக்கள் தொகை நீதியரசரின் கணக்கில் வரவில்லை. 1991 ஆம் ஆண்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையான 1,07,12,266 பேர்களில் 32.5 விழுக்காடு அதாவது மூன்றில் ஒரு பங்கினர் அருந்ததியர், 35 லட்சம் பேர்கள். கடைசியாக எடுக்கப்பட்ட 2001 ஆம் கணக்குப் படி மொத்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை விழுக்காடு 22.55. எனவே அருந்ததியர் மக்கள் தொகையும் இங்கே கூடியிருக்கின்றது.
இப்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகவும், சமூக, பொருளாதார அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, நிலம் சார்ந்த தொழில், அரசின் உயர் பதவிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற பதவிகள், அரசியல் உள்பட பலநிலைகளிலும் மிகவும் பின் தள்ளப்பட்டு இருப்பவர்கள் அருந்ததியர்கள்.
இந்த மக்களுக்காகத் தமிழக அரசு, மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது நன்றிக்குரியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், இம்மக்களின் மக்கள் தொகை அடிப்படையில் இது குறைவான ஒதுக்கீடு. தாழ்த்தப்பட்ட மக்களில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் அருந்ததியர்களுக்கு மூன்றில் ஒன்றாக 6 விழுக்காடு வழங்கப்படவேண்டும். எஞ்சிய 3 விழுக்காடும் கலைஞர் ஆட்சியிலேயே நிறைவேற்றப் பட வேண்டும் என்பது அருந்ததியர்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆரியத்தால் கொடுமையாக ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட அருந்ததியர்கள், திராவிடத்தால் விழிப்படையத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், காம்ப்ளே போன்றவர்களின் கருத்து, கலைஞர் மக்கள் பணிக்கு முன்னால் நிற்கவும் முடியாது நிலைக்கவும் முடியாது.
- மாதியக்கவிராயர்
Thanks to www.Keetru.com