அருந்ததியர் சமூக இயக்கமும் விடுதலைக்கான குரலும்

அருந்ததியர்களின் சமூக இயக்கம் மற்றும் போராட்டம் குறித்து இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. எக்காலந்தொட்டு அம்மக்கள் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதனையும் கோடிட்டு காட்டுகிறது. பல்வேறு பெயர்களில் அவர்கள் அழைக்கப்படுகின்ற பொழுதும் அருந்ததியர் என்ற பெயரே கட்டுரையில் பயன்படுத்தப்படுகிறது. ‘சக்கிலியன்’, ‘மாதிகா’ என்ற பெயர்கள் தவிர்க்கவியலாத இடங்களில் மட்டுமே இடம் பெறுகின்றன. சென்னை மாகாண அவை விவாதங்கள், மாவட்டக்கையேடுகள், ஹரிஜன் இதழ் மற்றும் களஆய்வில் சேகரித்த வாய்மொழித் தரவுகள் ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.மலம் அள்ளுதல்: காலனியத்தின் விளைவு பொதுவாக, அருந்ததியரை மலம் அள்ளும் சாதியாகவே காணும் போக்கு மேலோங்கி இருந்து வருகிறது; இது முற்றிலும் தவறான பார்வை.
மிருகங்களின் தோல் மூலம் தோல்பொருட்கள் உற்பத்தி செய்வதில் கூரறிவு கொண்ட அருந்ததியர் பெரும் பாலான தமிழகக் கிராமங்களில் வசித்து வருகின்றனர். விவசாய உற்பத்திக்கு கிணற்றிலிருந்து நீர்ப் பாய்ச்சத் தேவையான தோலினாலான கமலை அருந்ததியராலேயே தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலனிய ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பமான இயந்திரமுறை, ஒருபுறம் கமலை முறையை அப்புறப்படுத்தியது, மற்றொருபுறம் அதனை உற்பத்தி செய்துவந்த அருந்ததியருக்கும் கிராமத்திற்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. இவ்விரிசல் அருந்ததியர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வேறு தொழில்களைத் தேடி நகரங்களுக்கு குடிபெயர வேண்டிய சூழலை உண்டுபண்ணியது.இனி, அருந்ததியர் வாழ்வில் காலனியம் ஏற்படுத் திய பாதகமானச் செயலினைக் காண்போம்.
மலம் கழிப்பதற்கென கழிப்பறை முறையானது நகரங்களில் வசிக்கத் தொடங்கிய காலனிய ஆட்சிளார்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இது மெதுவாக கிராமங்களுக்கும் பரவத் தொடங்கியது. மேல்சாதியினர் குறிப்பாக மேல்சாதிப் பெண்கள் கழிப் பறையை பயன்படுத்தினர். இந்த கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கென அருந்ததியர் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டதாக வாய்மொழி வரலாறு தெரிவிக்கிறது. எனவே விவசாயத்தில் நீர்ப் பாய்ச்சுவதற் கென காலனியம் புகுத்திய நவீன தொழில்நுட்பம், கழிப்பறையின் அறிமுகம் ஆகியன மலம் அள்ளும் பணியை அருந்ததியர்மீது திணித்தது என கருதலாம். இது குறித்த வரலாற்று ஆய்வுகள் தவிர்க்க இயலாத தேவையாக உள்ளது. இவ்விடத்தில், அருந்ததியரின் குலத்தொழில் ‘’மலம் அள்ளுதல்’’ என்ற வரலாறு தவறானது என்று முடிவு செய்யலாம். அருந்ததிய மகா சபாவிலங்கின் தோல் மூலம் தோல்பொருட்கள் தயாரிப்பது மேல்சாதி இந்துக்களால் தீட்டாகவே கருதப்பட்டு வந்தது. இதனால் அத்தொழிலில் ஈடுபட்டு வந்த அருந்த தியர் தீண்டாமைக்குள்ளாயினர். மேலும் காலனியத் தால் அவர்கள் மலம் அள்ளுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டபோது தலித்துகளிலும் தலித்துகள் ஆனர். ‘அருந்ததியர் தலித்துகளிலும் தலித்துகள்’ என்னும் சொற்றொடரே அம்மக்கள் சாதிய சமூகத்தில் அனுபவித்த அல்லது அனுபவித்துவரும் ஒடுக்குமுறையை விளக்குவதற்குப் போதுமானதாகும். இதனை மேலும் விரிவாக எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இவ்விடத்தில் இல்லை. பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து அருந்ததியரை விடுவிப்பதற்கென 1921ல் அருந்ததிய மகாசபா என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.எம்.ஆர்.ஆர்.ஒய்.ராவ் சாகிப் எல்.சி. குருசாமி இதன் தலைவராகவும், எச்.எம். ஜெகநாதம் செயலாளராகவும் செயல்பட்டனர். இவ்விரு வரும் சென்னை மாகாண அவை உறுப்பினர்களாகவும் பொறுப்பு வகித்தனர். இப்பொறுப்பினை அருந்ததியர் மற்றும் இதர ஒதுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் களமாக பயன்படுத்திக் கொண்டனர்.


இவ்வியக்கம் எங்கெல்லாம் பரவியிருந்தது? எத்தனை மாநாடுகள் நடத்தப்பட்டன? என்னென்ன தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன? என்ற கேள்விகள் எழுகின்றன. ஆரம்ப காலங்களில் சென்னை நகரப்பகுதிகளில் மட்டும் இவ்வியக்கம் செயல்பட்டிருக்கிறது. இதர பகுதிகளில் வசித்து வந்த அருந்ததியர்
களை இவ்வியக்கம் அணி திரட்டியிருக்கவில்லை. சபாவின் தலைவர்கள் சென்னை மாகாண அவையில் உறுப்பினர்களாக இருந்ததால் அவர் களால் சென்னையில் மட்டுமே செயல்பட முடிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். ஆனால், சபா அருந்ததிய மக்களுக்கு கல்வி அளிப்பதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கிறது. ஒன்பதாண்டு கல்விப் பணிஒதுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்கள் தங்கள் சமூக மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியைப்போல், குருசாமியும், ஜெகந்நாத மும் அருந்ததியர்கள் கல்வி கற்கவேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டனர். இவர்கள் அருந்ததியர் மகாசபா சார்பில், 1)மாதிகா இரவுப்பள்ளி, புளியந் தோப்பு, 2)மாதிகா (அருந்ததிய மகாசபா) இரவுப்பள்ளி, பெரம்பூர், 3) அருந்ததிய மகாசபா இரவுப்பள்ளி, சூலை, 4)மக்டூன் செரி•ப் தெரு இரவுப்பள்ளி, பெரியமேடு மற்றும் 5) அருந்ததிய மகாசபா பகல் பள்ளி, பெரம்பூர் ஆகிய ஐந்து பள்ளிகளை 1921ஆம் ஆண்டு தொடங்கி 1929ஆம் ஆண்டுவரை நடத்திவந்தனர்.குருசாமியே இப்பள்ளிகளை நிர்வகித்து வந்தார். ஆசியர்களுக்கான சம்பளம் உட்பட இதர செலவினங்களுக்கான நிதி தொழிலாளர்துறை சார்பில் பள்ளியின் தாளாளர் குருசாமி மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு எவ் விதமான சம்பளமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் ஒன்பது ஆண்டுகளாக இவ்வைந்து பள்ளிகளையும் குருசாமியே தாளாளராக இருந்து நிர்வகித் வந்தா இச்சூழலில், காலனி ஆட்சியாளர்களின் கொள்கை நடவடிக்கையினால் இப்பள்ளிகளை தொடர்ந்து நடத்து வதில் சிக்கல் உருவானது.

மாதிகா இரவுப்பள்ளி, புளியந் தோப்பு மற்றும் மக்டூன் செரி•ப் தெரு இரவுப்பள்ளி, பெரியமேடு ஆகியவற்றைத் தொழிலாளர்துறை எடுத்துக்கொண்டது. மாதிகா (அருந்ததிய மகாசபா) இரவுப்பள்ளி, பெரம்பூர் மற்றும் அருந்ததிய மகாசபா பகல் பள்ளி, பெரம்பூர் ஆகியவற்றை குருசாமியே நிர்வ கித்து வந்தார். இந்நிலையில், கல்வித்துறை பரிந்துரையின் பேரில், தொழிலாளர்துறை இவ்விரு பள்ளிகளுக்கும் வழங்கிவந்த நிதியை நிறுத்திவிட்ட காரணத்தால் 5-வது பள்ளியான அருந்ததிய மகாசபா பகல் பள்ளியை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.இரட்டிப்பு நிதி செலவினை தவிர்க்கும் பொருட்டு இந்த நிதி நிறுத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை அலுவலர் தெரிவித்தார். தொழிலார்துறை எடுத்துக்கொண்ட மற்றும் நிதி நிறுத்தப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அருந்ததிய மகாசபாவின் தலைவருக்கு 1929ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ‘மாநகராட்சி அருந்ததிய மகாசபா பகல் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கொடுக்க இருக்கிறது. எனவே, இனிமேல், அருந்ததிய மகாசபா பகல் பள்ளிக்கு, நிதிஉதவி வழங்கப்பட மாட்டாது’ என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.அருந்ததிய மகாசபா பகல் பள்ளி மாணவர்களை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ப்பதை அருந்ததிய மகாசபா எதிர்த்தது. மேலும் தொழிலாளர்துறையின் நிதி உதவியின்றி, அருந்ததிய மகாசபாவே அதற்கான நிதியினைத் திரட்டி அப்பள்ளியை நடத்த வேண்டும் என தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அவர்களால், போதிய நிதி ஆதார மின்றி அப்பள்ளியை நடத்த இயலாமற் போனது. இதே போல், மகாசபா இரவுப்பள்ளியை தொழிலாளர் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அத்துறை கோரியது. சபா இதனை மறுத்துவிட்டதால் இதற்கான நிதியும் நிறுத்தப்பட்டது. எனவே, இப்பள்ளியையும் இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. காலனிய ஆட்சியின் கல்வி மற்றும் தொழிலாளர் துறைகளின் நடவடிக்கைகளினால் அருந்ததியர்களை கற்க வைக்கும் அருந்ததியர் மகாசபாவின் இயக்கப் பணி முடக்கப்பட்டது.நிதி பிரச்னையினால் அருந்ததியர் பள்ளிகளுக்கு வழங்கி வந்த நிதியுதவியை காலனிய ஆட்சி நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவ்வுதவியை நிறுத்தியதால் அருந்ததிய சமூக இயக்கமே பெரும் சிக்கலுக்குள்ளானது. ஒன்பது ஆண்டுகளாய் ஐந்து பள்ளிகளை நிர்வகித்து வந்த சபா அதனைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்திருந்தால் அருந்ததிய மக்களுக்கான பல தலைவர்களை அப் பள்ளியிலிருந்தே உருவாக்கியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடைபெறாததால் அருந்ததியரின் சமூக விடு தலைக்கு இடையூறு ஏற்பட்டது. இருப்பினும், அருந்த தியர் மகாசபா இதர பணிகளையும் செய்திருக்கிறது.‘சக்கிலியன்’: இழிபெயருக்கெதிரான முதல்குரல்சமூக விடுதலைக்காகப் போராடும் சாதிய இயக்கங்கள் தங்களின் பெயர்களை மாற்றுவதென்பது அடிப்படை தேவையாய் இருக்கிறது என்பதை அம்பேத்கர் மற்றும் சாதி இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். காலனிய ஆட்சிக்காலத்தில் தோன்றிய பல தலித் இயக்கங்கள் தங்களின் பெயரை மாற்ற முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. மூத்தவன், பழமையானவன் என்ற பொருளைத் தரும் ‘ஆதி’, என்ற பெயரோடு இவர்கள் தங்களை அடையாளப் படுத்தியிருக்கின்றனர்.
அருந்ததியர் தங்களை சக்கிலியன் என்று அடையாளப் படுத்துவதை எதிர்த்தே வந்திருக்கின்றனர். பெயர் மாற்றம் தொடர்பாக 1922ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு அரசாணையின்படி பறையன், சக்கிலியன் போன்ற இழிவுப்பெயர்கள் பயன்படுத்தப்படுவதும் தடைசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அரசாங்கமே சம்பந் தப்பட்ட மக்கள் வெறுத்தொதுக்கும் இழிபெயர்களாலேயே அவர்களைச் சுட்டியிருக்கிறது. இதற்கு எதிராக, சென்னை மாகாண அவை உறுப்பினர் பொறுப்பினை வகித்துவந்த தலித்துகள் குரலெழுப்பியுள்ளனர்.மேட்டுப்பாளையம் யூனியன் போர்டு, ‘’சக்கிலியன்’’ என்று குறிப்பிட்டதை எதிர்த்து ஆர்.வீரையன், 24 மார்ச்சு 1926 அன்று சென்னை மாகாண அவையில் கேள்வி எழுப்பினார் (இவர் ஆதிதிராவிடர்). ‘இழிவான பெயர் களால் சுட்டுவது தடை செய்யப்பட்ட பின்னரும், அது பயன்படுத்தப்படுவதை தொடர்ந்து நான் காண்கிறேன். அரசாங்கம் அத்தடையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்போகிறதா அல்லது இல்லையா என்பதை அறிய விரும்புகிறேன்’’ என்று வினவினார். இதற்கு உள்துறை அமைச்சரான பனகல் அரசர், ‘நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தினுடைய பணி அல்ல. அரசாங்கம் அவ் வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்பதை மட்டுமே தெரிவித்திருக்கிறது.பிறர் பயன்படுத்தினால், சம்பந்தப் பட்டவர்களே இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பதிலளித்தார். வீரையன், ‘இது எந்த தனிநபர்களும் பயன்படுத்தவில்லை. அப்பெயரை உள்ளூர் நிர்வாகமே அச்சிட்டிருக்கிறது’ என்றார். இதற்கு அவைத்தலைவர், ‘அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பின்னர் வீரையன் அரசாங்க ஆவணங்களில் அத்தகைய பெயர் களை பயன்படுத்தப்படுவதை அரசு ஆணை தடை செய்கிறது என்றார். பனகல் அரசரோ, உள்ளூர் நிர்வாக அமைப்புகளின் பதிவேடுகள், அரசாங்கத்தின் பதிவேடு களல்ல என்றார்.அப்படியென்றால், உள்ளூர் நிர்வாகம் அரசாங்கத்தின் ஒருபகுதி இல்லையா? என்று வினவி னார் வீரையன். பனகல் அரசர், குறிப்பிட்ட நிகழ்வினை கவனத்திற்கு கொண்டுவந்தால் அரசாங்கம் உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் என்றார்.வீரையன், ‘இங்கு மேட்டுப்பாளையம் யூனியன் போர்டு குறிப்பிட்ட நிகழ்வாகும். அவர்கள் அவ்வார்த்தையை நோட்டீசில் அச்சடித்திருக்கின்றனர். இதனை, நான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன்’’ என்றபோது, அந்த வார்த்தை உள்ள நோட்டீசை அரசாங்கத்திடம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பனகல் அரசர் பதிலளித்தார். சக்கிலியன் என்று இழிவாக அழைப்பதற்கெதிரான முதல்குரலாக சென்னை மாகாண அவையில் ஆர்.வீரையன் எழுப்பிய கேள்வியே தென்படுகிறது. பெயர் மாற்றம்: அருந்ததியர் ஐயாகாரு அல்லது ஐயா அவர்கள்அருந்ததியர் என்ற பெயரினை அச்சமூகத் தலைவர்கள் எக்காலத்திலிருந்து பயன்படுத்தத் தொடங்கினர் என்பதை மிகச் சரியாகக் கணிக்க இயலவில்லை. இருப்பினும், அவர்களின் சமூக இயக்கத்திற்கு “அருந்ததியர் மகாசபா’’ என்ற பெயரினை சூட்டியதிலிருந்து இப் பெயர் 1920களில் புழக்கத்திற்கு வந்திருக்கிறது என ஊகிக்கலாம். மேலும், இப்பெயரினை எல்.சி.குருசாமியும், எச்.எம்.ஜெகந்நாதமும் சமூகத்திற்கு அறிமுகம் செய்திருக்கலாம். ஏன் இப்பெயரை அவர்கள் தெரிவு செய்தார்கள்?, இதற்கான கருத்தியல் பின்புலத்தை எவ்வாறு பெற்றுக் கொண்டார்கள் என்பது குறித்த விவரங்களும் தெரியவில்லை. ஆனால் அவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டே, அருந்ததியர் என்ற பெயரால்தான் தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக அச்சமூகத்தின் தலைவர்கள் போராடியிருக்கின்றனர்.காலனி ஆட்சியாளர்கள் சாதிரீதியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினர். ஆரம்பகாலங்களில் அருந்ததியரை பறையரோடு இணைத்து கணக்கெடுத்தனர். ஆனால் வெகுவிரைவில் அவ்வாறு செய்தது தவறு என்று உணர்ந்தனர்.
‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 130,386 மாதிகா. அதாவது சக்கலர் (சக்கிலியர்) பறையர்களோடு இணைக்கப்பட்டு இருந்திருக்கின்றனர். நிச்சயமாக இது தவறு, இவ்விரண்டு வகுப்பினரும் முழுமையாக வேறுபட்டவர்கள்’ என்று கோவை மாவட்டக் கையேட்டில் காணப்படும் மேற்குறிப்பிட்ட வாக்கியமே இதற்கு சாட்சி. ஆனால் பின்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் கோவை, சேலம், செங்கற்பட்டு போன்ற மாவட்டங்களில் சக்கிலியன் மற்றும் மாதிகா என்றும், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி போன்ற மாவட்டங்களில் சக்கிலியன் என்றும் குறிக்கப் பெற்றிருக்கின்றனர்.மேலும் அவர்கள் தெலுங்கு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் (depressed Clas) என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனால் 1931 கணக்கெடுப்பின்போது, கோவை, சேலம், செங்கற்பட்டு, வடஆற்காடு ஆகிய மாவட்டங்கள் உட்பட சென்னை மாகாணத்தில் 17,396 பேர் சக்கிலியன், மாதிகா போன்ற பெயர்களை புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்திருக்கின்றனர். இப்பெயர் மாற்றம் அருந்ததியர் இயக்கத்தின் செயல்பாடு இல்லாமல் நிகழ்ந்திருக்க இயலாது. எனவே, அருந்ததி யர் மகாசபா கல்விப் பணியிலிருந்து முடக்கப்பட்ட போதிலும் அவ்வியக்கம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டும் தனது மக்களை அணிதிரட்டிக் கொண்டும் இருந்திருக்கிறது என்பதனை அறியலாம்.பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தங்களை அருந்ததியர் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவந்து விட வேண்டும் என்பதற்காக தொடர் போராட்டத்தையே நடத்தியிருக்கின்றனர். எச்.எம்.ஜெகநாதம், 5 ஆகஸ்டு 1932ல் சென்னை மாகாண அவையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார். ‘தற்போது மாதிகா, சக்கிலி யன், மாதாங்கா, கோசாங்கி, ஆதி-ஜம்புவா (கொம்மு, சின்டு, மாஸ்டிங்கு உட்பட) ஆகியோரை ‘அருந்ததியர் ஐயாகாரு அல்லது ஐயா அவர்கள்’ என்றே அரசாங்க பதிவேடுகளில் குறிக்கவேண்டும்’ என்பதே அத்தீர்மானம். தெலுங்கு சொல்லான காரு தமிழில் அவர்கள் என்ற மதிப்பிற்குரிய சொல்லிற்கு இணையானதாகும். இத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக அவர் சில காரணங்களையும் அவையில் விளக்கினார். அதன் சுருக்கத்தை இங்கு காணலாம்:பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வரும் அருந்ததிய மக்கள் வேறுபடுத்த இயலாத ஒரே மக்கள் ஆவர். அவர்கள் ஒரே மொழியை பேசுகின்றனர். ஒரே கடவுளை வணங்குகின்றனர். திருமணம் மற்றும் இறப்புச்சடங்குகள் ஒன்றாகவே இருக்கிறது. ஒருவருக் கொருவர் கலப்பு மணம் புரிந்து கொள்கின்றனர். எல்லா வற்றிக்கும் மேலாக அவர்கள் பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒரே தொழிலையே செய்து வருகின்றனர். எந்தச்சூழலும் அவர்களை ஒருவரிடத்திலிருந்து மற்றொ ருவரை பிரிக்கவில்லை. அருந்ததியர் என்று அழைப்பதனால் எற்படும் பலன்களையும் விவரித்தார். முதலில் அம்மக்களிடையே ஒற்றுமை உருவாகும். இரண்டாவது, அருந்ததியரின் குறைகளை போக்குவதற்கு அம்மக்கள் முயற்சிப்பதற்கு பெரும் வழிவகுக்கும் என்றார். மேலும் அருந்ததியர் என்பதே அம்மக்களின் உண்மையான பெயர் என்றார். தீர்மானத்தை ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரும் சென்னை மாகாண அவை உறுப்பினரு மான வி.ஐ.முனுசாமி பிள்ளை ஆதரித்து வழி மொழிந்து பேசினார். இதற்கு சட்ட உறுப்பினர் எம். கிருஷ்ணன் நாயர், அனைத்து பழைய அரசு பதிவேடுகளில் புதிய பெயரை சேர்க்க இயலாது என்று பதிலளித்தார். ஜெகந்நாதம் இனிவரும் காலங்களில் அருந்ததியர் என்ற பெயரை சேர்க்கவேண்டும் எனக் கோரினார். ஆர். மதன கோபால் நாயுடு என்ற உறுப்பினர், பறையர் என்ற பெயர் எவ்வாறு ஆதிதிராவிடர் என்று மாற்றப்பட்டதோ, அதே போல் சக்கிலியன், மாதிகா ஆகிய பெயர்களை அருந்ததியர் என்று மாற்றவேண்டுமென ஜெகந்நாதம் கோருகிறார் என்றார்.இதற்கு கிருஷ்ணன் நாயர், அவர்கள் தங்களை அருந்ததியர் என்று அழைத்துக் கொண்டால் அரசாங்கமும் அவ்வாறே அழைக்கும். இந்த உத்தரவா தத்தை மட்டுமே தரமுடியும் என்றார். அதனைத் தொடர்ந்து இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் அரசு பதிவேடுகள், நூல்கள் போன்றவற்றில் அருந்ததியர் என்ற பெயர் இடம் பெற்றிருக்கிறது. சக்கிலியன், மாதிகா போன்ற பெயர்களையும் காணமுடிகிறது.மலம் அள்ளுவதற்கு எதிரான போராட்டம்காலனி ஆட்சிக் காலத்திலிருந்து அருந்ததியர்கள் மலம் அள்ளுதல் என்னும் இழிதொழிலுக்குள் புகுத்தப்பட்டி ருக்கின்றனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அருந்ததிய மகாசபா, ‘மலம் அள்ளாதே’ என்று போராடி யதாகத் தெரியவில்லை. இருப்பினும் அருந்ததியர் உட்பட இதர தலித் குற்றவாளிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் சிறைக்குள் மலம் அள்ளுவதற்கு நிர்ப்பந்திக்கப் படுவதை எதிர்த்து சென்னை மாகாண அவையில் தலித் உறுப்பினர்கள் போராடியிருக்கின்றனர். ‘சிறைச்சாலைக்குள் கைதிகள் அறையிலிருக்கும் கைதிகளே அவர்களின் மலத்தையும் சிறுநீரையும் அப்புறப்படுத்திவிடுவதாக நான் அறிகிறேன். அவ்வாறிருக்கும்போது மலம் அள்ளுவதற்கென்று ஏன் ஒரு சிறப்பு வகுப்பை நியமிக்க வேண்டும்’’ என்று ஆர். வீரையன் 17 டிசம்பர் 1925ல் வினவினார்.இதற்கு பதிலளித்த உள்துறை உறுப்பினர், சில சிறைகளில் சம்பந்தப்பட்ட கைதிகளே அவர்களின் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சில சிறைகளில் அவ்வாறு செய்ய முடிய வில்லை என்றார். சிறைக் கையேடு மலம் அள்ளுவதற்கு அதற்குரிய வகுப்பாரை நியமிக்க வேண்டும், அவர்கள் இல்லாத பட்சத்தில் இதர ஒதுக்கப்பட்ட வகுப்புகளை அப்பணிக்கு அமர்த்தவேண்டும் என்று குறிப்பிடுகிறதா என்று வீரையன் கேள்வி எழுப்பினார். இதற்கு, பொதுவாக (சிறைக்கு) வெளியே யார் இப்பணியைச் செய்கிறார்களோ அவர்களே சிறையிலும் அப்பணியை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று உள்துறை உறுப்பினர் பதிலளித்தார். இ.கக்கன், ஜே.சிவசண்முகம் பிள்ளை ஆகியோரும் அருந்ததியர் உட்பட இதர தலித் சிறைக்கைதிகள் சிறைக்குள் மலம் அள்ளுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதை எதிர்த்து சென்னை மாகாண அவைக்குள் போராடியுள்ளனர்.இவ்விடத்தில் நம் விவாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதானது, சிறைக்குள் கைதிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்ததாகும். சிறையில் ஒரு பணியைச் செய்வதற்கான அளவுகோல் என்ன? அது ஒரு கைதி செய்த குற்றத்தின் தன்மையைப் பொறுத்ததா? அல்லது அவர் பிறந்த சாதியைப் பொறுத்ததா?. சென்னை மாகாண அவைக்குள் தலித் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில், சிறைக்குள் ஒரு பணியைச் செய்வதற்கான அளவுகோல் கைதிகள் செய்த குற்றத்தின் தன்மையைப் பொறுத்தது அல்ல; மாறாக கைதிகள் பிறந்த சாதியைப் பொறுத்ததே என்பதனை தெளிவாக்குகிறது.
தலித் அல்லாத ஒருவர் மிகக் கொடூரமான குற்றத்தை செய்ததற்காக தண்டனை பெற்றிருந்தாலும் அவரின் மலத்தை அப்புறப்படுத்துவதற்கு ஒரு தலித் குற்றவாளி நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்.ஒரு தலித் சிறிய அல்லது கொடூரமான குற்றம் செய்தால் அல்லது அவர் குற்றமே செய்யாமல் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தால் அவர் சிறைத் தண்டனையோடு பிறரின் மலத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற தண்டனையும் அனுபவிக்க நேரிட்டுள்ளது. இத்தண்டனை எவ்வித விசாரணையுமின்றி அவர்மீது திணிக்கப்பட்டுள்ளது. இது தலித் ஒருவர் குற்றம் செய்தால் அவர் இரண்டு தண்டனையை அனுபவிக்கவேண்டிய சூழல் இருந்திருப்பதைக் காட்டுகிறது. ஒன்று, அவர் செய்த குற்றத் திற்காக இந்திய தண்டனைச் சட்டம் வழங்கும் தண்டனை; மற்றொன்று மநு(அ)தர்மச் சட்டம் அளித்திருக்கும் தண்டனை. முன்னதிலிருந்து விடுதலை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு; ஆனால் பின்னதிலிருந்து அதற்கான வாய்ப்புகள் ஒருபோதும் இல்லை. இந்த மநு(அ)தர்மச் சட்டத்தை காலனிய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சிறைக் கையேடு ஏற்றுக்கொண்டது என்பது கவனத்திற் கொள்ள வேண்டும். இப்பின்னணியில் தலித் உறுப்பினர்கள் சென்னை மாகாண அவைக்குள் எழுப்பிய கேள்விகளை நோக்கினால், அது சாதியின் பெயரால் தலித் குற்றவாளிகளுக்கு இரண்டு தண்டனை வழங்குவதை எதிர்த்தப் போராட்டம் என்பதனை புரிந்து கொள்ளலாம்.மலத்தை அப்புறப்படுத்தும் அருந்ததியர்கள் சென்னை மாநகரத்தில் அப்பணியை புறக்கணித்துவிட்டு வேலை நிறுத்தம் நடத்தயிருப்பதாக 1946ம் ஆண்டு அறிவித்தி ருக்கின்றனர்.இப்போராட்டத்திற்கான காரணம் என்ன என்பது மிகச் சரியாகக் கூறமுடியவில்லை. இருப்பினும், ஊதியம் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. இப்போராட்டம் எந்த அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது என்பதை அறிய இயலவில்லை. வேலைநிறுத்த அறிவிப்பு வெளியானதும் சென்னை மாநகரமே பதறியிருக்கிறது. குறிப்பாக சென்னை மாகாண அவை உறுப்பினர்கள் அதிர்ந்துவிட்டனர். கே.டி.கோசல்ராம், 2 ஆகஸ்ட் 1946ல், துப்புரவுத் தொழி லாளர்களின் வேலைநிறுத்தத்தை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்றார்.

மாநகராட்சி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார் அமைச்சர். எச்.எஸ்.குசைன் சாகிப் என்ற உறுப்பினர், இந்த வேலைநிறுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளை பொது சுகாதார அமைச்சர் அறிவாரா? என்று வினவினார். அதற்கு அமைச்சர் ‘ஆம். இந்த வேலைநிறுத்தத்தால் ஏற்படும் விளைவுகளை குறித்து அரசாங்கம் விழிப்புணர்வுடன்தான் இருக்கிறது. மாநகராட்சி ஆணையர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்; இதனால் தீர்வு ஏற்படும்’ என்றார். வேலைநிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் கே.டி. கோசல்ராம் உட்பட இதர உறுப்பினர்கள் முனைப்புடன் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவு. ஆனால் தலித் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிராக எந்த ஒரு கேள்வியையும் எழுப்ப வில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய செய்தி. இது, அருந்ததியர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலித் உறுப்பினர்கள் ஆதரித்திருக்கின்றனர் என்பதையே சுட்டுகிறது. இவ்வேலைநிறுத்தமே காலனிய ஆட்சிக் காலத்தில் அருந்ததியர் நடத்திய முதல் போராட்டமாகக் கருதலாம். முடிவுரைஇக்கட்டுரையிலிருந்து சில முடிவுகளை தொகுத்துக் கூறலாம். முதலில், காலனியம் அறிமுகப்படுத்திய கழிப்பறை முறையினாலும், புதிய தொழில் நுட்பத்தாலும், தோல் தொழிலில் கூரறிவுத்திறன் கொண்டவர்களான அருந்ததியர் மலம் அள்ளும் இழிதொழில் செய்வதற்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். இதனால் ஒடுக்குமுறைக்கும் ஒதுக்குமுறைக்கும் உள்ளான அம்மக்களை விடுவிப்பதற்காக கல்வியே அடிப்படையானது என்று எல்.சி. குருசாமியும், எச்.எம்.ஜெகந்நாதமும் அப்பணியைச் செய்திருக்கின்றனர். ஆனால், காலனிய ஆட்சியின் கொள்கை முடிவு ஒருபுறம், அப்பணியை முடக்கிவிட்டது, மற்றொருபுறம், அச்சமூகத்திலிருந்து தலைவர்கள் உருவாவதை தடுத்து அம்மக்களின் விடுதலைக்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இருப்பினும், இதர சிக்கல்மீது தங்களின் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். பல்வேறு பெயர்களிலும், பல்வேறு பகுதிகளிலும் ஒரே தொழில் செய்யும் தங்களை அருந்ததியர் என்று அழைக்கவேண்டும் என்ற பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்ட எச்.எம். ஜெகந்நாதம் வெற்றி கண்டார். இழிபெயர்களை புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரைச் சூட்டிக் கொள்ளுதல், சிறையில் அருந்ததியர் உட்பட இதர தலித் குற்றவாளிகளை மலம் அள்ளுவதற்கு நிர்ப்பந்தித்தல் ஆகியவற்றை எதிர்த்த போராட்டத்தில் இதர தலித் தலைவர்களின், குறிப்பாக ஆதி-திராவிடர்களின் பங்கேற்பு வரலாற்றில் புறக்கணிக்க இயலாதது. (நன்றி- மா.வேலுசாமி )