கோயிலில் பூஜை செய்த அருந்ததியர்களுக்கு அடி, உதை, அபராதம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோயிலில் பூஜை செய்த அருந்ததியர்களுக்கு அடி, உதை விழுந்தது. மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சுமார் 30 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஊருக்கு வடக்கே உள்ள அய்யனார் கோயில் சிவராத்திரி அன்று இரவில் பூஜை செய்தால் உடல் குணமாகும் என்று கூறி இக்கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த கலியன் மகன் வீரமுத்து, தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் கோவிந்தராஜ், பூசாரி, அவருடன் வந்த 2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 6 பேர் அய்யனார் கோயிலுக்கு சென்று இரவு பூஜை செய்துள்ளனர்.

இதையறிந்த ஒரு தரப்பினர் பூசை செய்த 6 பேரையும் இழுத்து வந்து ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் தூண்களில் கட்டிவைத்து விடிய விடிய அடித்தும், எச்சில் துப்பியும் சித்ரவதை செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.

பிப்.24 அன்று காலை 6 மணியளவில் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அவர்களிடமிருந்த நகைகளையும் ரூ.2000 பணத்தையும் பறித்துக் கொண்டு அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று பாதிக்கப்பட்டவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான கோவிந்த ராஜ் தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்தன் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.