நவ-27-ல் அருந்ததியர் ஒதுக்கீடு முடிவு

சென்னை நவ-23.(டிஎன்எஸ்)  நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கையின் பரிந்துரையை பரிசீலித்து முடிவெடுக்க 27ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கென தனியாக  3 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கையாகும்.

தாழ்த்தப்பட்டவர்களில் மிகவும் தாழ்த்தப்பட்டோ ராக உள்ள அருந்ததி யர் வகுப்பினர் முன்னேற்றத்துக்கு ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க அரசு கருதியிருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் சர்வகட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் குழு அமைப்பது என்றும் அந்த குழுவின் அறிக்கையை 6 மாத காலத்திற்குள் பெற்று அதனை நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி ஜனார்த்தனம் இது குறித்து விரிவாக ஆய்வு செய்து அருந்ததியர் எனப்படுவோருள் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிக்கா, தோட்டா ஆகிய பிரிவினரையும் உள்ளடக்கி அவர்களின் மொத்த மக்கள் தொகை அடிப்படையில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில்  3 சதவீத உள் ஒதுக்கீட்டினை வழங்கலாம் என்று பரிந்துரை செய்தார்.

நவ-22 அன்று இந்த அறிக்கையை தமிழக அரசிடம் நீதிபதி ஜனார்த்தனம் அளித்தார். அருந்ததியர் சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற இந்த பரிந்துரை அறிக்கையை பரிசீலனை செய்து முடிவெடுப்பதற்காக வரும் 27ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவின் அடிப்படையில்,  அருந்ததியர் சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கு, சட்டரீதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று  முதல்வர் கருணாநிதி நவ-23 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)



Thanks to http://tamil.chennaionline.com