குடியரசு தினத்தில் முடியாதது மகளிர் தினத்தில் முடிந்தது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே ஊராட்சி அலுவலகம் முன், குடியரசு தினத்தன்று, கொடியேற்ற முடியாமல் ஏமாற்றமடைந்த பெண் ஊராட்சித் தலைவர், மகளிர் தினமான நேற்று, வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில், தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று, அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. ஆனால், கறம்பக்குடி தாலுகா கரு.வடதெரு ஊராட்சி அலுவலகம் முன் கொடியேற்ற முயன்ற பெண் ஊராட்சித் தலைவர் கலைமணியை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்தனர். கலைமணி ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமுதாயத்தினர் தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்தனர் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலாவதி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, மகளிர் தினமான நேற்று, ஊராட்சி அலுவலகம் முன் தேசியக் கொடி ஏற்றுவதென முடிவானது.
இதையொட்டி, நேற்று காலை 8 மணிக்கு , கரு.வடதெரு ஊராட்சி அலுவலகம் முன், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில், ஊராட்சித் தலைவர் கலைமணி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.