தலித் நீதிபதி என்பதால் தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறேன்: நீதிபதி சிஎஸ்.கர்ணன் வேதனை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


நான் தலித் நீதிபதி என்பதால் 2009ம் ஆண்டுமுதல் பணியில் உள்ள மற்ற நீதிபதிகள் என்னை ஜாதிரீதியாக அவமானப்படுத்துகின்றனர். ஒரு நீதிபதி பொது நிகழ்ச்சி ஒன்றில் என்னை ஷூ காலால் வேண்டுமென்றே மிதித்துவிட்டு பின்னர் வருத்தம் தெரிவித்தார். மற்றொரு நீதிபதி இதேபோல பொது நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் என்பெயர் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை கிழித்து கீழே எறிந்து காலால் போட்டு மிதித்தார். அங்கிருந்த நீதிபதிகள் சிலர் அதைக் கண்டு ரசித்தனர். இப்படி தலித் நீதிபதி என்பதால் தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறேன்.

இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் தேசியத் தலைவரிடம் புகார் செய்தேன். அவர் அந்த புகாரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் எனது புகார் தொடர்பாக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். எனது புகார் தொடர்பாக எப்போது என்னிடம் கேட்டாலும் உரிய ஆதாரங்களை அளிப்பேன். இந்த விவகாரத்தில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு சிஎஸ்.கர்ணன் தெரிவித்தார்.