இரண்டு தசாப்பதங்களுக்கு பின்னர் கோயிலுக்குச் சென்ற தலித் மக்கள்

தமிழக உத்தபுரம் பகுதியில் தலித் இன மக்களுக்கு  இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு நேற்றைய தினம் கிடைத்துள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ளது உத்தபுரம். இங்கு தலித் மக்களையும் மற்றொரு சமூகத்தினரையும் பிரிக்கும் வகையில் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டிருந்தது.
இந்த தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தன.
இதனையடுத்து கடந்த 2008ம் ஆண்டு திமுக அரசு தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை இடித்து பொதுப்பாதை ஏற்படுத்திக் கொடுத்தது.
இது தவிர அரசமர வழிபாட்டு உரிமை, கோவில் வழிபாட்டு உரிமை, நிழற்குடை கட்டுவது, தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் செல்லும் சாக்கடையை திருப்பி விடுவது போன்ற பிரச்சனைகளும் தொடர்ந்து இருந்து வந்தன.
உத்தபுரத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களால் முத்தாலம்மன், அரசமர வளாகம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கோவிலும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் முன்னிலையில் தலித் மக்களும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உத்தபுரம் காவல் நிலையம் உள்ள இடத்தில் நிழற்குடை கட்டுவது, முத்தாலம்மன் கோவிலுக்குள் இருதரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்வது, இரு தரப்பிலும் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவது என உடன்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலுக்கு தலித் மக்களும், மற்றொரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் சென்று வழிபாடு செய்தனர்.
பூஜைப் பொருட்களுடன் தலித் மக்கள் கோவிலுக்கு சென்றபோது அவர்களை மற்றொரு சமூகத்தினர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். பின்பு கோவில் பூசாரி முத்தாலம்மனுக்கு பூஜைகள் செய்தார்.